

சென்னை: மூதாட்டியின் உயிரைக் காப்பாற்றிய, பெரியபாளையம் காவல் நிலைய காவலர் கங்கனை, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேரில் அழைத்து பாராட்டினார்.
சென்னை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில், காவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்தும் வகையில் காவல் துறைசார்பில் `அன்பான அணுகுமுறை' என்ற முன்னோடிப் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் 2-வது பயிற்சியில் பெரியபாளையம் காவல் நிலைய முதல்நிலை காவலர் ச.கங்கன் சமீபத்தில் பங்கேற்றார்.
அவர், தன்னுடைய வசிப்பிடமான திருவள்ளூர் மாவட்டம், ஆட்டுப்பாக்கம் கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த கோகிலா (60) என்பவர் மாடு மிதித்து மூச்சுப்பேச்சின்றி உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்தபோது, அவரை சுமார் 500 மீட்டர் தூரம் தோளில் சுமந்து,பிரதான சாலைக்குக் கொண்டு சென்று, உள்ளங்கை உள்ளங்காலில் சூடுபறக்கத் தேய்த்தும், இருதயம் அருகே விட்டு விட்டு அழுத்தம் கொடுத்தும் (CPR-Cardiopulmonary resuscitation), மூச்சைவரவைத்து பின்னர் தனது இருசக்கர வாகனத்தில் செந்தில்குமார் என்பவர் உதவியுடன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து உறவினர்கள் வந்ததும் அவர்களிடம் ஒப்படைத்தார்.
தனக்கு அளிக்கப்பட்ட சிறிய ஓய்வு நேரத்தில் ஓர் உயிரைக் காப்பாற்றக் காரணமாக இருந்த முதல்நிலை காவலர் ச.கங்கனை தலைமைச் செயலர் வெ.இறையன்பு நேரில் அழைத்து, புத்தகம் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.