Published : 12 May 2017 07:21 AM
Last Updated : 12 May 2017 07:21 AM

மத்திய அரசின் 3 ஆண்டு சாதனையை தமிழக அரசு மலராக வெளியிடுகிறதா? - செய்தித்துறை இயக்குநர் மறுப்பு

மத்திய அரசு கேட்டுக் கொண்டதால் அவர்களின் திட்டங்கள் குறித்த விவரங்களை மட்டும் சேகரித்துக் கொடுக்கிறோம். தமிழக அரசு மத்திய அரசின் சாதனை மலரை வெளியிடவில்லை என செய்தித்துறை இயக்குநர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்தார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக, திமுக ஆட்சிகள் மாறி மாறி தங்கள் சாதனைகளை தேர்தல் நேரத்தில் வெளியிடுவது வழக்கம். அதேபோல், ஆட்சிக் காலத்திலும், ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்ட புதிய திட்டங்கள், அவற்றின் தற்போதைய நிலை, ஓராண்டில் செய்து முடித்த பணிகள் என சாதனைகளைத் தொகுத்து ஆண்டு மலராக வெளியிடுவதும் உண்டு. அதேபோல் மத்திய அரசும் ஆண்டுதோறும் தனியாக சாதனை மலரை வெளியிடும்.

இந்நிலையில் தமிழக அரசு மத்திய அரசின் 3 ஆண்டுகள் சாதனை மலரை வெளியிட உள்ளதாக தகவல் வெளியானது. குறிப்பாக தமிழக செய்தித்துறை இயக்குநர் மத்திய அரசின் குறிப்பிட்ட திட்டங்கள் தொடர்பான விவரங்களை சேகரிக்குமாறு மாவட்ட செய்தித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்திய கடிதமும் வெளியானது.

ஏற்கெனவே, தமிழக அமைச்சர் களிடம் முதல்வர் கே.பழனிசாமி மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார். இதை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், மத்திய அரசின் சாதனை மலரை தமிழக அரசு தயாரிக்க உள்ளது என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், மத்திய அரசு கோரிக்கையின்படி இந்த விவரங்கள் மட்டும் சேகரிக்கப்படுவதாக செய்தித்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இது தொடர்பாக செய்தித்துறை இயக்குநர் ஜெ.குமரகுருபரன் கூறியதாவது:

தமிழக அரசைப் பொறுத்தவரை ஆண்டுதோறும் மாநில அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பயனாளிகளின் பேட்டியுடன் வெற்றிக் கதைகளாக தொகுத்து வெளியிடப்படும். அதை மத்திய அரசு கவனித்து இதேபோல மத்திய அரசின் திட்டங்களையும், பயனாளிகளின் பேட்டியுடன் வெற்றிக் கதைகள் போல் தொகுத்து அளிக்கும்படி கேட்டுக் கொண்டது. தற்போது மத்திய அரசு 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இந்தத் தகவல்கள் தொகுக்கப்பட்டு அளிக்கப்படுகின்றன. இதில் பயனாளிகளின் பேட்டியை அவர்கள் தமிழில் அல்லது வேறு எந்த மொழியிலும் வெளியிடலாம். மத்திய அரசு கேட்டுக்கொண்டதால், மத்திய அரசு அதிகாரிகள், நிதியின் கீழ் இந்த விவரங்கள் தொகுக்கப்பட உள்ளன. என் கடிதம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x