

பழவந்தாங்கல் ரயில் நிலையம் அருகில் உள்ள மதுக் கடையை உடனடியாக அங்கிருந்து அகற்றா விட்டால் போராட்டம் வெடிக்கும் என பெண்கள் கூட்டமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பழவந்தாங்கல் ரயில் நிலையம் பழவந்தாங்கல், நங்கநல்லூர், மூவரசம்பேட்டை, உள்ளகரம், தில்லை கங்கா நகர், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு முக்கியமான ரயில் நிலையமாக விளங்குகிறது. காலை, மாலை வேளைகளில் இந்த ரயில் நிலையத்தில் இருந்து பணிக்குச் செல்லும் பெண்கள், கல்லூரி மாணவியர் என தினமும் நூற்றுக்கணக்கானோர் இரு மார்க்கங்களிலும் மின்சார ரயில்களில் சென்று திரும்பு கின்றனர். இந்த ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறும் பிரதான படிக்கட்டுகளுக்கு அருகிலேயே ஒரு மதுக் கடை இயங்கி வருகிறது. இதனால் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறும் பெண்கள் போதை நபர்களிடம் சிக்கி படாதபாடு படுகின்றனர்.
குறிப்பாக இரவு நேரங்களில் ரயில் நிலையத்தில் இருந்து தனி யாக வரும் பெண்களிடம் போதை நபர்கள் அத்துமீறும் சம்பவங்களும் அடிக்கடி இப்பகுதியில் நடக்கிறது. இந்த மதுக் கடையின் அருகிலேயே பல கோயில்கள் இருந்தும் விதி முறைகளை மீறி இந்த கடை இயங்கி வருகிறது.
நங்கநல்லூர் ஆஞ்சநேயர், ராஜராஜேஸ்வரி, சாய்பாபா, குருவாயூரப்பன் போன்ற பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு வருபவர்களுக்கும் இந்த ரயில் நிலையமே பிரதானமாக உள்ளது. ஆனால், இப்பகுதியில் ஹோட்டல், பெட்டிக்கடை நடத்துபவர் களுக்கு இந்த மதுக் கடையால் வியாபாரம் நடக்கிறது என்பதால் அவர்கள் போதை நபர்களை கண்டுகொள்வது கிடையாது. தங்கு தடையின்றி செயல்படும் மதுக் கடை மற்றும் பார் காரணமாக வெளி இடங்களில் இருந்தும் ரயிலில் வந்து மது அருந்திவிட்டு படிகளிலேயே வாந்தி எடுப்பது, சிறுநீர் கழிப்பது போன்ற அநாகரிகங்களும் தொடர்ந்து வருகிறது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நேரங்களிலும்கூட போலீ ஸார் இப்பகுதிகளில் ரோந்து வருவது இல்லை. இதுதொடர்பாக நங்கநல்லூர், பழவந்தாங்கல் மற்றும் தில்லை கங்கா நகர் பகுதி பொதுமக்கள் பலமுறை அதி காரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இனியும் தாமதிக்காமல் இந்த மதுக் கடையை இப்பகுதி யில் இருந்து உடனடியாக அப்புறப் படுத்தாவிட்டால் போராட்டம் வெடிக்கும் என்கின்றனர் அப்பகுதி பெண்கள் கூட்டமைப்பினர்.
இதுதொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகளிடம் கேட்டபோது, “பழவந்தாங்கல் ரயில் நிலையம் அருகில் உள்ள மதுக் கடையை அங்கிருந்து அகற்றக் கோரி இன் னும் எங்களுக்கு எழுத்துப் பூர்வமாக எந்த புகாரும் வரவில்லை. வந்தால் பரிசீலிக்கப்படும்” என்றனர்.