

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயத் தேவைக்கும், மண்பாண்டம் செய்வதற்கும் மேலும், 985 குளங்களில் இருந்து மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. கோடை காலம் முடியும் நேரத்தில், காலம் கடந்து அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இம்மாவட்டத்தில் 18 ஆண்டுகளுக்கு பிறகு 1,051 குளங்களில் வண்டல் எடுக்க மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் அனுமதி அளித்திருந்தது. இதன் மூலம் 100 குளங்கள் கூட முழுமையாக தூர்வாரப்படவில்லை. பெரும்பாலான குளங்களில் 25 சதவீதம் மட்டுமே வண்டல் எடுக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் நெருங்கும் நிலையில் பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
5,158 பேருக்கு அனுமதி
தற்போது கூடுதலாக 985 குளங்களில் இருந்து வண்டல் எடுத்துக்கொள்ள மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் அனுமதி அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கெனவே1,051 குளங்களில் இருந்து வண்டல் எடுக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது, கூடுதலாக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 910 குளங்கள் மற்றும் ஊரக வளச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 75 குளங்கள் என மொத்தம் 2,036 குளங்களில் வண்டல் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விவசாயிகளிடம் இருந்து 5,558 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் 5,158 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 1,30,710 கனமீட்டர் வண்டல் மண் எடுக்க விவசாயிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள், வீட்டு தேவைக்கு மண் பயன்படுத்துவோரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். அனுமதித்த அளவில் வண்டல், களிமண், கிராவல் எடுக்க விரும்புவோர், வட்டார வேளாண்மை அல்லது தோட்டக்கலை உதவி இயக்குநர்களிடம் கிராம நிர்வாக அலுவலர் சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். பருவமழை தொடங்கும் முன்பே குளங்களில் தூர்வாரும் பணிகளை செய்து முடிக்க வேண்டியுள்ளதால் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
காலம் கடந்த அறிவிப்பு
இதுகுறித்து, குமரி மாவட்ட பாசனத்துறையினர் கூறும்போது, ‘‘தற்போது ஆட்சியர் அளித்திருக்கும் அனுமதியை, கோடைகாலம் தொடங்கிய போதே கொடுத்திருந்தால், பெரும்பாலான குளங்கள் அரசுக்கு செலவில்லாமல் விவசாயிகளால் தூர்வாரப்பட்டிருக்கும். இதன் மூலம் விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள், வீடு கட்டுவோர் பயனடைந்திருப்பார்கள்.
ஆனால், கோடை காலம் முடிய இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில், எப்போது வேண்டுமானாலும் பருவ மழை சீஸன் தொடங்க வாய்ப்புள்ளது. இந்த குறுகிய காலத்துக்குள் இத்திட்டம் முழுமை பெறுமா என்பது சந்தேகமே. காலம் கடந்த அறிவிப்பாகவே இதை நாங்கள் கருதுகிறோம்’’ என்றனர்.