

தஞ்சாவூர் | தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பயணிகள் தங்கும் அறைகள் பூட்டியே கிடப்பதால், பயணிகள் தங்க முடியாமல் சிரமமடைந்து வருகின்றனர். எனவே, இதை விரைவில் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் ரயில் நிலையத்தின் வழியாக நாள்தோறும் 60-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இங்கு, பயணிகள் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் சார்பில் பயணிகள் தங்கும் அறைகள் பல ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்தன. இங்கு, தலா 5 குளிர்சாதன மற்றும் சாதாரண அறைகள் உள்ளன. இவற்றுக்கு குறைந்த வாடகையே வசூலிக்கப்பட்டதால், பயணிகள் இந்த அறைகளை பயன்படுத்தி வந்தனர்.
இதனிடையே, கரோனா ஊரடங்கு தொடங்கியதும் இந்த அறைகள் மூடப்பட்டன. ஆனால், இயல்புநிலை திரும்பி ஓராண்டுக்கு மேல் ஆகியும் இதுவரை இந்த அறைகள் மீண்டும் திறக்கப்படவில்லை. தொடர்ந்து 3 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளதால், இந்த அறைகள் பராமரிப்பின்றி சேதமடைந்து வருவதுடன், அறைகளில் இருந்த குளிர்சாதன இயந்திரங்களும் பழுதடைந்துவிட்டன.
இதனால், தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள், ரயில் நிலையத்துக்கு வெளியே உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் அதிக வாடகை கொடுத்து தங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே, 3 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள இந்த ரயில் நிலைய தங்கும் அறைகளை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து காவிரி டெல்டா ரயில் பயணிகள் சங்கச் செயலாளர் வெ.ஜீவக்குமார் கூறும்போது, ‘‘கரோனா தளர்வுக்குப் பிறகு ரயில்கள் அனைத்தும் இயக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியும், தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் உள்ள தங்கும் அறைகள் இன்னும் திறக்கப்படாமல் மூடியே உள்ளன. எனவே, இதை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
இதுதொடர்பாக தஞ்சாவூர் ரயில் நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘திருச்சி கோட்டத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் மூடப்பட்ட தங்கும் அறைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தஞ்சாவூரில் உள்ள தங்கும் அறைகளையும் திறக்க வேண்டும் என உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.
தற்போது, இந்த அறைகள் ஐஆர்சிடிசி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் பராமரிப்பு பணிகளைத் தொடங்குவதாக கூறியுள்ளனர். இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த அறைகள் பயன்பாட்டுக்கு வரும்’’ என்றனர்.