Published : 25 Feb 2023 06:13 AM
Last Updated : 25 Feb 2023 06:13 AM
தென்காசி: கருப்பாநதி அணை வறண்டு போயிருக்கும் நிலையில், கோடை காலத்தைப் பயன்படுத்தி அணையைத் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். தென்காசி மாவட்டத்தில் கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் அணை என 5 அணைகள் உள்ளன.
இந்த 5 அணைகளும் குறைவான அளவு நீரை தேக்கும் வகையிலேயே உள்ளன. இவற்றில் அடவிநயினார் அணை மட்டுமே மொத்த கொள்ளளவான 175 மில்லியன் கனஅடி நீரை தேக்கும் அளவுக்கு உள்ளது. தவிர மற்ற 4 அணைகளும் தூர்ந்து போய் காணப்படுகின்றன.
கடனாநதி அணையின் மொத்த கொள்ளளவு 428.52 மில்லியன் கனஅடி. ஆனால் மண் தேங்கி கிடப்பதால் இந்த அணையில் 335.52 மில்லியன் கனஅடி நீரை மட்டுமே தேக்க முடியும். இதேபோல் 152 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையில் 119.80 மில்லியன் கனஅடி நீரையும், 185 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணையில் 120.84 மில்லியன் கனஅடி நீரையும், 25 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணையில் 18.43 மில்லியன் கனஅடி நீரையும் மட்டுமே தேக்க முடிகிறது.
கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு அணைகள் தூர்ந்து கிடப்பதால் குறைவான அளவிலேயே நீரை தேக்க முடிகிறது. இதனால், பருவமழைக் காலத்தில் கிடைக்கும் நீரை அணையில் முழுமையாக தேக்கி வைத்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. பாசனத்துக்கு தண்ணீர் திறந்தால் அணைகள் வேகமாக வற்றிவிடுகின்றன.
132.22 அடி உயரம் உள்ள அடவிநயினார் அணை, 72.10 அடி உயரம் உள்ள கருப்பாநதி அணை ஆகியவை வறண்டுவிட்டன. கருப்பாநதி அணை மூலம் 9,514 ஏக்கர் நிலங்கள் நேரடி, மறைமுக பாசன வசதி பெறுகிறது. மேலும் கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளில் உள்ள மக்களுக்கு, கருப்பாநதி குடிநீர் திட்டத்தின் மூலம் தினமும் 35 லட்சம் லீட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கோடைக் காலத்தை பயன்படுத்தி தூர்ந்து கிடக்கும் கருப்பாநதி அணையைத் தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, “கருப்பாநதி அணை தூர்ந்து கிடப்பதால் கடைமடை பகுதிக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை.
இனி ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கினால்தான், அணைக்கு நீர் வரத்து கிடைக்கும். கோடை மழை பெய்தாலும் அதனால் அணைக்கு நீர் வரத்து கிடைக்க வாய்ப்பு இல்லை. பருவமழை தொடங்குவதற்கு இன்னும் 3 மாத காலத்துக்கு மேல் அவகாசம் இருப்பதால் முழு கொள்ளளவுக்கும் நீரைத் தேக்கும் வகையில் அணையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அணையைத் தூர்வாரினால் கடையநல்லூர் நகராட்சி பகுதிக்கு கூடுதல் காலத்துக்கு குடிநீர் வழங்கவும் முடியும். எனவே அணையைத் தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக மக்கள் பிரதிநிதிகள் குரல் கொடுக்க வேண்டும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT