

ஆற்காடு: நிலஅபகரிப்பு குற்றத்தில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் பாஜக விவசாய அணி சார்பில் வஃக்பு வாரியத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் வீடு இழந்தவர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஆற்காட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக பாஜக மூத்த தலைவரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான எச்.ராஜா பங்கேற்று பேசினார்.
பின்னர் அவர், செய்தியாளர் களிடம் கூறும்போது, ‘‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்து விரோத கட்சியான திமுக, தமிழ்நாட்டில் பல்வேறு கிராமங்களில் குறிப்பிட்ட இடங்களில் உள்ள சொத்துக்களை, வஃக்பு வாரியத்தின் தடையில்லாசான்று இல்லாமல் பதிவு செய்யக்கூடாது என சார் பதிவாளர்களுக்கு மாநில அரசு அறிக்கை அனுப்பியுள்ளது. ஆற்காடு வேப்பூர், மேல்விஷாரம் பகுதிகளில் வஃக்பு வாரியத்துக்கு சொந்தமான இடம், அனைத்தும் இந்துக்களுக்கு சொந்தமானது.
ஆனால், அதை வஃக்பு வாரியத்துக்கு அளித்துள்ளனர். சொத்து மாற்று சட்டத்தின்படி ஒரு நிலம் தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் இருந்தால், அவை யார் கையில் இருந்தாலும் அப்படியே பாதுகாக்க வேண்டும். தீர்ப்பு வந்த பிறகு மற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஆனால், ஆற்காட்டில் உள்ள வேப்பூர், மேல்விஷராத்தில் ராசாத்திபுரத்தில் அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்தவரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் சேர்ந்து அங்கிருந்த இந்துக்களை சட்ட விரோதமாக வெளியேற்றி உள்ளனர். இது நிலஅபகரிப்பு குற்றத்தை இருவரும் செய்துள் ளார்கள்.
அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டு அதிகாரிகளை பிடித்து சிறையில் அடைத்தால் தான், மற்றவர்கள் தவறு செய்ய மாட்டார்கள். தமிழகத்தில் வஃக்பு வாரியத்தின் அனைத்து அறிவிப்புகளும் ஆதாரமற்றவை. இந்துக்களின் நிலம், வீடுகளை பறித்து, அவர்களை யாசகர்களாக ஆகும் வகையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசின் தீய எண்ணத்தை வன்மையாக கண்டிக்கிறோம்’’ என்றார்.
அப்போது, மாநில விவசாய அணி தலைவர் நாகராஜன், மாவட்டத் தலைவர் விஜயன், மாவட்ட விவசாய அணித்தலைவர் துளசிராமன் உட்பட பலர் உடனிருந்தனர்.