கரூர் | அரவக்குறிச்சி அருகே கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி உயிரிழப்பு கார் மோதி

கரூர் | அரவக்குறிச்சி அருகே கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி உயிரிழப்பு கார் மோதி

Published on

கரூர்: அரவக்குறிச்சி அருகே கார் மோதியதில் 2 சக்கர வாகனத்தில் சென்ற தம்பதி உயிரிழந்தனர். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள புதுவாடியைச் சேர்ந்தவர் ராஜு (62). இவர் மனைவி தனக்கொடி (56). இவர்ள் மகன் முரளி (35). இவர் மனைவி நித்யா (28). இவர்கள் தற்போது அரவக்குறிச்சி அம்மன் நகரில் வசித்து வருகின்றனர்.

புதுவாடியில் நடந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இரு தனித்தனி இரு சக்கர வாகனங்களில் ராஜு அவர் மனைவி தனக்கொடியுடனும், முரளி அவர் மனைவி நித்யாவுடனும் இன்று (பிப். 24 தேதி) சென்றுள்ளனர். இவர்கள் அரவக்குறிச்சியை அடுத்த மேட்டுப்பட்டி பிரிவு சாலையில் எதிர்திசையில் தவறான பாதையில் சென்றுள்ளனர்.

அப்போது திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி வந்த கார் முதலில் முரளியின் இரு சக்கர வாகனத்தில் மோதி பின்னால் வந்துக்கொண்டிருந்த ராஜுவின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி சாலையோரம் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த ராஜு, தனக்கொடி தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நித்யா லேசான காயமடைந்தார். முரளி காயமின்றி தப்பினார்.

விபத்தில் காயமடைந்த கார் ஓட்டுநரான கோவை கணபதி அருகேயுள்ள டிபிசி காலனியை சேர்ந்த கார் ஓட்டுநர் ஜெபமாலைராஜ் (62) கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அரவக்குறிச்சி போலீஸார் ஜெபமாலைராஜ் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in