Published : 23 May 2017 09:05 AM
Last Updated : 23 May 2017 09:05 AM

சாதிய ஆணவ கொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும்: நல்லகண்ணு வலியுறுத்தல்

தமிழகத்தில் சாதிய ஆணவ கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவரும் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாநிலத் தலைவருமான ஆர்.நல்லகண்ணு வலியுறுத்தினார்.

இது குறித்து அவர் நேற்று மேலும் கூறியதாவது:

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் முதல் மாநாடு சென்னையில் வரும் 27, 28 ஆகிய தேதிகளில் நடக்கிறது. தமிழகத்தில் சாதிய ஆணவ படுகொலைகள் நடக்கின்றன. சாதிய கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். மாநில தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் அமைக்க வேண்டும். மாவட்ட அளவில் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விழிப்புணர்வு கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் மாநாட்டில் வலியுறுத்தப்படும்.

சாதிய கொடுமைகளுக்கு எதிராக கட்சிகள் தனித்தனியாக போராட்டம் நடத்தியிருந்தாலும், சமூக மாற்றத்துக்காக மக்களை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படவில்லை. தற்போது கலப்புத் திருமணம் எனும் சாதி மறுப்பு திருமணத்தை ஏற்காத நிலை உள்ளது. அதற்கு சமூக மாற்றம் தேவை. ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமூலா, டெல்லி பல்கலைக்கழக மாணவர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் சாதியின் பெயரால் இறந்துள்ளனர்.

டாஸ்மாக் மதுக்கடைகளை படிப்படியாக மூடுவோம் என அரசு சொன்னது. ஆனால், நெடுஞ்சாலைகளில் இருந்து மதுக்கடைகளை அகற்றி, குடியிருப்புகளில் வைக்கிறது. இதனை எதிர்த்து பெண்கள் போராட்டம் நடத்துகின்றனர். இது தன்னெழுச்சியான போராட்டம். போராடுவோர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. டாஸ்மாக் கடைகளை மூடுவதா அல்லது திறப்பதா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். மதுக்கடைகளுக்கு எதிராக மக்கள் எழுச்சி மேலும் வர வேண்டும். அதற்கு என் ஆதரவு உண்டு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், “இந்தியாவில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அவ்வாறு வருவோர் தமிழக வளர்ச்சிக்கு என்ன கொள்கை வைத்துள்ளனர் என்பதை அறிய வேண்டும். காவிரி பிரச்சினை, ஈழப் பிரச்சினை, தமிழகத்தின் தனித்தன்மை பிரச்சினை போன்றவற்றில் எந்த மாதிரியான கொள்கைகளை ரஜினி வைத்துள்ளார் என்பது முக்கியம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x