Published : 08 May 2017 10:39 AM
Last Updated : 08 May 2017 10:39 AM

ஜூன் 3-ம் தேதி தொண்டர்களை சந்திக்கிறாரா கருணாநிதி?

திமுக தலைவர் கருணாநிதி ஜூன் 3-ம் தேதி தொண்டர்களை சந்திப்பாரா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னையில் ஜூன் 3-ம் தேதி நடைபெறவுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் மற்றும் சட்டப் பேரவை வைர விழாவில் சோனியா காந்தி, நிதிஷ் குமார், லாலுபிரசாத் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

திமுக தலைவர் கருணாநிதி, 1957-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் குளித்தலை தொகுதியில் வெற்றி பெற்று முதல்முறையாக சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைத்தார். கடந்த 60 ஆண்டுகளில் போட்டியிட்ட எந்தத் தேர்தலிலும் தோல்வியை சந்திக்காதவர் என்ற வரலாற்றுப் பெருமை அவருக்கு உண்டு. அவர் சட்டப்பேரவைக்குள் நுழைந்ததின் 60-ம் ஆண்டு வைர விழாவை திமுக சார்பில் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் ஜூன் 3-ம் தேதி கருணாநிதியின் பிறந்தநாளை திமுகவினர் சிறப்பாக கொண்டாடுவர். இந்த ஆண்டு பிறந்த நாளுடன் சேர்த்து கருணாநிதியின் சட்டப் பேரவை வைர விழாவையும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நடக்கவுள்ள இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பல்வேறு மாநில முதல்வர்களும் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி ஜூன் 3-ம் தேதி தொண்டர்களை சந்திக்கிறார் என்று திமுக எம்.பி.யும், அக்கட்சியின் அமைப்புச் செயலாளாருமான ஆர்.எஸ்.பாரதி தெரிவித்ததாக தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.

இது குறித்து திமுக எம்.பி.யும், செய்தித் தொடர்பாளருமான டிகேஎஸ் இளங்கோவனிடம் பேசினோம். ''இந்தத் தகவலில் உண்மையில்லை. தலைவர் கருணாநிதி குறைந்த பட்சம் ஒரு மணிநேரமாவது தொண்டர்களை சந்தித்தால் நன்றாக இருக்கும் என ஆலோசித்தோம். ஆனால், மருத்துவர்கள் அனுமதி இல்லாமல் கருணாநிதி தொண்டர்களை சந்திப்பதற்கு வாய்ப்பு இல்லை. மருத்துவர்கள் அனுமதி தருவது குறித்து இனிமேல்தான் தெரிய வரும்'' என்றார்.

இந்நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் 'மருத்துவர்கள் அனுமதித்தால் தலைவர் கருணாநிதி தொண்டர்களை சந்திப்பார்' என்று கூறினார்.

மருத்துவர்கள் அனுமதி எப்போது கிடைக்கும், கருணாநிதி தொண்டர்களை சந்திப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x