பள்ளிக்கல்வி துறைக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.3 ஆயிரம் கோடி நிதி என்ன ஆனது? - விளக்கம் அளிக்க அண்ணாமலை வலியுறுத்தல்

பள்ளிக்கல்வி துறைக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.3 ஆயிரம் கோடி நிதி என்ன ஆனது? - விளக்கம் அளிக்க அண்ணாமலை வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: தமிழக பள்ளிகளுக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.3 ஆயிரம் கோடி நிதி என்ன ஆனது? என்பது பற்றி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவிக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளும் சிறப்பான கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவருக்கும் கல்வி உரிமை என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள், ஏழை மாணவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கல்விச் செலவை மத்திய அரசே ஏற்றுக் கொள்கிறது.

ஒவ்வொரு ஆண்டும், மாநில அரசுகளுக்கு, இதற்கான நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்தத் திட்டத்துக்கு, 2021-2022-ம் ஆண்டில் ரூ.1,598 கோடியும், 2022-2023-ம் ஆண்டுக்கு கடந்த டிசம்பர் மாதம் வரை ரூ.1,421 கோடியும் மத்திய அரசு வழங்கியுள்ளது.

அதிர்ச்சி அளிக்கிறது: இந்நிலையில், 2 ஆண்டுகளாக, தமிழகப் பள்ளிகளுக்கு மழலையர் வகுப்புக்கான நிதி வழங்கப்படவில்லை என்று, தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம்சாட்டியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இந்தத் திட்டத்துக்காக 2 ஆண்டுகளாக மத்திய அரசு வழங்கிய நிதி சுமார் ரூ.3,000 கோடி என்னஆனது என்பதை, தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

மேலும், தமிழகம் முழுவதும் பாழடைந்து கிடக்கும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளி கட்டிடங்களின் தற்போதைய நிலை என்ன என்பதை அமைச்சர் கூற வேண்டும்.

திட்டத்தை முடக்க... தங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும்பள்ளிகளில், 25 சதவீத இடங்களை, ஏழை மாணவர்களின் கல்விக்காக ஒதுக்க விரும்பாமல், ஒட்டுமொத்தமாக இந்தத் திட்டத்தையே முடக்க நினைக்கிறதோ என்ற வகையில் திமுக அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன.

ஏழை மாணவர்கள் கல்வி பெறுவதைத் தடுக்க முயற்சிக்காமல், உடனடியாக பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை திமுக அரசு வழங்க வேண்டும். அதேபோல், அரசுப் பள்ளிகளை மேம்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in