ஈரோட்டில் அவதூறாக பேசியதாக புகார்: சீமான் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு

ஈரோட்டில் அவதூறாக பேசியதாக புகார்: சீமான் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு
Updated on
1 min read

ஈரோடு: ஈரோட்டில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்ட சமூக மக்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திருநகர் காலனியில் கடந்த 13-ம் தேதி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, அவர் ஒரு குறிப்பிட்டசமூக மக்கள் குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாக, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பல்வேறு அமைப்பினர் புகார் தெரிவித்திருந்தனர். இது குறித்து விளக்கமளிக்க, நாம் தமிழர் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் ஈஸ்வரன் அளித்த புகாரின் பேரில், சீமான் மீது, எஸ்சி-எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 3 பிரிவுகளில் கருங்கல்பாளையம் போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.

மோதல் சம்பவத்தில் கைது: ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சீமான் பிரச்சாரம் மேற்கொண்டபோது, திமுகவினர் மற்றும் நாம் தமிழரிடையே மோதல் ஏற்பட்டது.

இதில் இரு தரப்பினரும், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில், திமுக மேட்டுப்பாளையம் நகர செயலாளர் முகமது யுனஸ் (49) உள்ளிட்ட 5 பேரும், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ரவிகுமார் உள்ளிட்ட 5 பேரும், ஆயுதப்படையைச் சேர்ந்த 3 போலீஸாரும் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் மீது வழக்கு பதிந்த ஈரோடு வடக்கு போலீஸார், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கணேஷ் பாபு, விஜய் ஆகியோரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in