Published : 24 Feb 2023 04:00 AM
Last Updated : 24 Feb 2023 04:00 AM
திருப்பூர்: குடியிருப்புகளுக்கு அருகே இயங்கும் கல் குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டுமென, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், ஆட்சியர் சு.வினீத் தலைமையில் நேற்று நடைபெற்றது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். ஊத்துக்குளி மொரட்டுப்பாளையத்தில் குடியிருப்புகளுக்கு அருகே இயங்கும் 3 கல் குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்,
கோடாங்கிபாளையம் கல் குவாரிகள் அனுமதி தொடர்பாக வரும் 10, 16-ம் தேதிகளில் கருத்து கேட்புக் கூட்டம் நடத்து கின்றனர். ஆனால், போதிய ஆவணங்கள் இல்லை. அலங்கியம் கொள்முதல் நிலையத்தில் பழைய சுமை தூக்கும் தொழிலாளர்கள், புதிய சுமை தூக்கும் தொழிலாளர்களிடையே பிரச்சினை எழுவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இது தொடர்பாக சுமூக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஏப்ரல் முதல் வாரத்தில்கரும்பு அரவை பணிகளை தாமதிக்காமல் தொடங்க வேண்டும். மக்காச்சோளத்தின் விலை மூட்டைக்கு ரூ. 100 முதல் ரூ.150 வரை குறைந்து விட்டது. உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அமராவதி அணை நீர்மட்டம் 60 அடிக்கு உள்ளது.
கோடை காலத்துக்கு முன்பாக 50 அடிக்கு வந்துவிடும். பயிர் சாகுபடிக்கு தேவையான தண்ணீர் இருப்பை உறுதி செய்ய வேண்டும். தாராபுரத்தில் ராஜவாய்க்கால் 10 கி.மீ.தூரம் நகருக்குள் உள்ளது. அரசு மருத்துவமனை கழிவுகள், சின்னக்கடை வீதியிலுள்ள இறைச்சிக் கடை கழிவுகள் அனைத்தும் வாய்க்காலில் கொட்டப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கிறது.
நஞ்சியம்பாளையம் ஊராட்சி யின் குடிநீர் ஆதாரமாக இந்த வாய்க்கால் உள்ளதால், பொது மக்கள் மற்றும் நீர் நிலையின் எதிர்காலம் கருதி சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். பிஏபியின் கடைமடையான வெள்ளகோவில் பகுதிக்கு தண்ணீர் வருவதில்லை. பிஏபி பச்ச பாளையம் பாசன சபையில் தேர்தல் நடைபெறாமல் இருப்பதால், நீர் நிர்வாகத்தில் சிக்கல் எழுந்துள்ளது.
அங்கு தேர்தல் நடத்த வேண்டும். பொங்கலூர், காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளின் குப்பைஅனைத்தும் வாய்க்காலில் கொட் டப்படுவதால், தண்ணீர் வராமல் கழிவுதான் கடைமடைக்கு வருகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் ஆவின் பால் விற்பனையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆவின் ஒன்றியத்தை விரிவாக்கம் செய்து, பால் பாக்கெட் மற்றும் பால் பொருட்கள் இங்கேயே உற்பத்தி செய்வதை உறுதிப்படுத்த வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினர். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், இணை இயக்குநர் (வேளாண்மை) மாரியப்பன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணவேணி உட்பட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT