

தேமுதிக பொதுக்குழுவை விரைவில் கூட்டுவதற்கு அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். இதில், பிரேமலதாவுக்கு முக்கிய பதவி அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து 104 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக, படுதோல்வியைச் சந்தித்தது. இதனால், கட்சியினர் சோர்வடைந்தனர். இதையடுத்து கட்சியை பலப்படுத்தும் வகையில் நிர்வாகிகள் மாற்றம், கூடுதல் மாவட்டச் செயலாளர்கள் நியமனம், தொண்டர்களை மாவட்ட வாரியாக சந்தித்து ஆலோசனை நடத்துவது போன்ற நடவடிக்கைகளில் விஜயகாந்த் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக ‘உங்களுடன் நான்’ என்ற நிகழ்ச்சி மூலம் மாவட்டந்தோறும் சென்று கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து குழு புகைப்படம் எடுத்தார்.
இதற்கிடையே, கடந்த 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை மொத்தமுள்ள 64 மாவட்டச் செயலாளர்களையும் சென்னைக்கு வரவழைத்து, அவர்களிடம் விஜயகாந்த் தனித் தனியாக ஆலோசனை நடத்தினார். மாவட்டச் செயலாளர், உட்கட்சி தேர்தல் பொறுப்பாளர்களிடம் தேமுதிகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை, புதியதாக சேர்க்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் விவரம், தொண்டர்களின் குறைகள் உள்ளிட்டவை குறித்து சுமார் 2 மணி நேரம் விஜயகாந்த் கேட்டறிந்துள்ளார். மதிய உணவு நேரத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் அமர்ந்து சாப்பிட்டார்.
இது தொடர்பாக தேமுதிக நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ‘‘தேமுதிகவின் பலத்தை மீண்டும் நிரூபிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் தனிப் பொறுப்பாளரை நியமிக்க உள்ளார். இந்தப் பொறுப்பாளர்கள் தலைமையில் அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். குடிநீர், சாலை வசதி போன்ற மக்கள் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி நிர்வாகிகள் செயல்பட வேண்டும். தொகுதிப் பணியின் செயல்பாடுகள் குறித்து 3 அல்லது 5 மாதங்களில் தலைமை நிர்வாகிகளிடம் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், கட்சியில் 40 லட்சம் உறுப்பினர்களுக்கும் ஸ்மார்ட் அட்டை வழங்கும் பணிகள் விரைவில் நிறைவடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்’’ என்றனர்.
பிரேமலதாவுக்கு முக்கிய பதவி
மற்றொரு தரப்பினர் கூறும்போது, ‘‘கட்சியை பலப்படுத்தும் வகையில் தேமுதிகவில் பிரேமலதாவுக்கு மாநில அளவில் முக்கியப் பதவி வழங்க வேண்டும் என சில மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து, கட்சியின் பொதுக்குழுவை கூட்டுவதற்கு விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். இதுபற்றி ஒரு வாரத்தில் அறிவிப்பை வெளியிடுவார். பொதுக்குழுவில் பிரேமலதாவுக்கு பதவி வழங்குவது உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.