Published : 24 Feb 2023 04:15 AM
Last Updated : 24 Feb 2023 04:15 AM
சென்னை: மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ஆலோசனை நிறுவனத்தை இறுதி செய்த பிறகு, 75 நாட்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. பரங்கிமலை-சென்னை சென்ட்ரல், விமானநிலையம்-விம்கோநகர் ஆகிய 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதையடுத்து, சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 118.9 கி.மீ. தூரத்தில் 3 வழித்தடங்களில் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோரயில் திட்டத்தைச் செயல்படுத்த பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். இதையடுத்து, மதுரை, திருச்சி உட்பட 4 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.
அதன்படி, மதுரையில் மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் பணி கடந்த ஆண்டு நடைபெற்றது. மதுரையில் தோப்பூர் பகுதியில் இருந்து ஒத்தக்கடை வேளாண் கல்லுாரி வரை மொத்தம் 35 கி.மீ. தூரத்துக்கு ஆய்வு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 31 கி.மீ தொலைவு வரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ஆலோசனை நிறுவனத்தை தேர்வு செய்ய ஒப்பந்தப்புள்ளியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த வாரம் கோரியிருந்தது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன் கூறியதாவது: மதுரை மாநகர் மக்களின் போக்குவரத்து வசதிக்காக, விரைவு போக்குவரத்து அமைப்புக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் வெளியிட்டுள்ளது.
இதன் முதல் கட்டத் திட்டம் 18 ரயில் நிலையங்களுடன் 31 கி.மீ தொலைவுக்கு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரையிலான போக்குவரத்து திட்டமாகும். இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ள நிலையில், இதன் அடிப்படையில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழக அரசு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான ஆலோசனை நிறுவனம் விரைவில் இறுதி செய்யப்பட உள்ளது. அந்நிறுவனம் மூலம் 75 நாட்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். ரயில் நிலைய வகை, செலவுகள், செயல்படுத்தப்படும் முறை, சமூக மற்றும் பொருளாதார விவரங்கள் இந்த அறிக்கையில் அடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT