Published : 24 Feb 2023 04:15 AM
Last Updated : 24 Feb 2023 04:15 AM
கூடலூர்: முல்லை பெரியாறு அணையில் நிலநடுக்கத்தை அளவிடும் மற் றும் பாதிப்புகளை கண்டறியும் கருவிகளை ஹைதராபாத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நேற்று பொருத்தினர்.
நில நடுக்கத்தால் முல்லை பெரியாறு அணைக்குப் பாதிப்புஏற்பட வாய்ப்புள்ளது என்று கேரள அரசு தொடர்ந்து கூறி வந்தது. மேலும் இதுபோன்ற சூழ்நிலையைக் கண்காணிப்பதற்கும், அதிர்வுகளைப் பதிவு செய்வதற்கும் உரிய கருவி களைப் பொருத்த வேண்டும் என்றும் கண்காணிப்புக் குழுவை கேரள அரசு வலியுறுத்தியது.
இதைத் தொடர்ந்து நிலநடுக்கத்தை அளவிடும் மற்றும் பாதிப்புகளைக் கண்டறியும் சீஸ்மோகிராப் மற்றும் ஆக்சலரோகிராப் ஆகிய கருவிகளை அணைப் பகுதியில் பொருத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக ரூ.99.95 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட கருவிகள் நேற்று முன்தினம் பெரியாறு அணைக்குக் கொண்டு செல்லப்பட்டன.
நேற்று இவற்றைப் பொருத்துவதற்கான பணிகள் நடந்தன. ஹைதராபாத்தைச் சேர்ந்த மத்திய அரசின் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிலைய முதுநிலை முதன்மை விஞ்ஞானி விஜயராகவன், முதன்மை விஞ்ஞானி சேகர் தலைமையிலான குழுவினர் இக்கருவிகளை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், உதவிப் பொறியாளர் ராஜகோபால், கேரள நீர்ப்பாசனத் துறை தலைமைப் பொறியாளர் பிரியேஸ், கேரள மின் வாரிய தொழில்நுட்ப நிபுணர் ஜேம்ஸ்வில்சன், கட்டப்பனை கோட்ட செயற் பொறியாளர் ஹரிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆக்சலரோகிராப் கருவி அணையின் மேல் பகுதி மற்றும் சுரங்கப் பகுதியிலும், சீஸ் மோகிராப் அணையின் கேம்ப் பகுதியிலும் பொருத்தப்பட்டன. இக்கருவிகளின் சமிக்ஞை, செயற்கைக்கோள் மூலம் ஹைதராபாத் ஆராய்ச்சி நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT