

ஐஐடி மாணவருக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் கையை முறித்த காவல்துறைக்கு ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையில், ''இறைச்சிக்காக கால்நடைகள் விற்பனைக்கு மத்திய அரசு தடைவிதித்ததை எதிர்த்து சென்னை, ஐஐடி வளாகத்தில் மாட்டிறைச்சி உண்ணும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கெடுத்த சூரஜ் என்ற மாணவர் மீது பாசிச நபர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தக் கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்து இன்று சென்னையில் புரட்சிகர மாணவர்-இளைஞர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்ட நிலையில், போராட்டத்தில் ஈடு பட்டவர்களை தரதரவென இழுத்துச் சென்று கைது செய்த தமிழக காவல்துறை, உரிமைக்குரல் எழுப்பும் ஒரு பெண் போராளியின் கையை மடக்கி முறிக்கும் காட்சி தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாகப் பரவிவருகிறது.
பொதுமக்களுக்கு காவல் அளிக்க வேண்டிய காவல்துறையே கையை முறிப்பது, போன்ற மிருகத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது வெட்கத்திற்குரியது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கீழ் வரும் காவல்துறை, காவிகளைக் காக்கும் துறையாக மாறிவருகிறது என்பதற்கு உதாரணமாக இதுபோன்ற அத்துமீறல்கள் எடுத்துரைக்கின்றன.
மாணவர் சூரஜ் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தியவர்களைக் கைது செய்யாத காவல்துறை அறவழியில் போராடிய பெண்ணின் கையை முறித்தது அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும். இதுபோன்ற தமிழக காவல்துறையினரின் மனிதாபிமானமற்ற, அராஜக செயலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்த மனிதஉரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கை முறிவு ஏற்பட்ட பெண்ணிற்கு உரிய சிகிச்சையும், நிவாரணமும் வழங்க வேண்டும்.போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர் அமைப்பினர் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்'' என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.