Published : 24 Feb 2023 04:50 AM
Last Updated : 24 Feb 2023 04:50 AM

மீண்டும் ஒற்றைத் தலைமையின்கீழ் வந்த அதிமுக - மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி வாகை சூடுமா?

சேலம் மாவட்டத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர் பழனிசாமி. இவர் எம்ஜிஆர் காலத்திலேயே அதிமுகவில் இணைந்தவர். எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜானகி அணி, ஜெயலலிதா அணி என அதிமுக பிளவுபட, ஜெயலலிதா அணியில் இபிஎஸ் இணைந்தார். 1989 சட்டப்பேரவை தேர்தலில், ஜெயலலிதா அணியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு முதல்முறையாக எம்எல்ஏவாகி சட்டப்பேரவைக்கு சென்றார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராகவும் மாறினார்.

இதன் காரணமாக 1998-ம் ஆண்டு திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் இபிஎஸ்ஸை நிறுத்தி, எம்.பி. ஆக்கினார் ஜெயலலிதா. அதன் பிறகு வந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களிலும் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கினார் ஜெயலலிதா. ஆனால் அவரால் வெற்றி வாய்ப்பை பெற முடியவில்லை. இருப்பினும், சேலம் மாவட்டத்தில் திமுகவில் பலத்த செல்வாக்குடன் இருந்த வீரபாண்டி ஆறுமுகத்தை துணிச்சலுடன் எதிர்கொண்டு வந்தார். இதன்மூலம் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக தொடர்ந்தார். ஒரு கட்டத்தில் கொங்கு மண்டலத்தில் பெரும்பாலான தொகுதிகளை அதிமுக வசமாக்கி ஜெயலலிதாவின் பாராட்டை பெற்றார்.

இதன் விளைவாக, கடந்த 2011 மற்றும் 2016 சட்டப்பேரவை தேர்தல்களில் அதிமுக ஆட்சியமைத்த நிலையில், இபிஎஸ்ஸை அமைச்சராக்கி, பொதுப்பணி, நெடுஞ்சாலை என முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை வழங்கினார் ஜெயலலிதா. அவரது ஆட்சியில் அமைச்சரவை மாற்றம், துறை பறிப்பு போன்றவை சர்வ சாதாரணம். ஆனால், அதில் இருந்து தப்பிய ஒருசில அமைச்சர்களில் இபிஎஸ்ஸும் ஒருவர்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, 2017-ம் ஆண்டு சசிகலா முதல்வராக பதவியேற்க திட்டமிட்ட நிலையில், அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்ல நேர்ந்தது. அப்போது சசிகலாவை எதிர்த்து பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கி இருந்தார். அதனால் புதிய நபர் ஒருவரை தற்காலிகமாக முதல்வராக்க சசிகலா திட்டமிட்டார். செங்கோட்டையன் போன்ற மூத்த அமைச்சர்களை பரிசீலித்தார். இறுதியாக சசிகலா ஆசியுடன் முதல்வராகும் வாய்ப்பை இபிஎஸ் பெற்றார்.

ஒருகட்டத்தில், துணிச்சலாக சசிகலாவை எதிர்த்து நின்றார். இது அதிமுகவினர் மத்தியில் முதலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் கட்சியில் பெரும்பாலானவர்கள் இபிஎஸ்ஸுக்கு ஆதரவாக நின்றனர். ஆட்சியை கவிழ்க்க நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டுவரப்பட்ட நிலையிலும், அவற்றை எல்லாம் எதிர்கொண்டு நான்கரை ஆண்டு அதிமுக ஆட்சியை, ஓபிஎஸ்ஸுடன் இணைந்து நிறைவு செய்தார்.

2021 சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை எழுந்தபோது, ‘முதல்வர் வேட்பாளர் இபிஎஸ்’ என ஓபிஎஸ் வாயாலேயே அறிவிக்க வைத்தார். பின்னர் அவரையும் சமாளித்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் பெற்றார்.

அதன் பின்னர், கடந்த ஆண்டுஅதிமுக சார்பில் 2 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பாளர்களை நிறுத்த வேண்டி இருந்தது. இதற்கு வேட்பாளரை தேர்வு செய்வதிலும் இருவருக்கும் உடன்பாடு எட்டப்படாமல் காலதாமதம் ஆனது. கட்சி ஒற்றைத் தலைமையின் கீழ் இருந்தால் மட்டுமே சிறப்பாக செயல்பட முடியும் என முடிவெடுத்த இபிஎஸ், பல்வேறு சட்டப் போராட்டங்களை கடந்து, தற்போது பொதுக்குழு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அதிமுகவை முழுமையாக தனது ஒற்றைத் தலைமையின் கீழ் கொண்டு வந்துள்ளார்.

அதிமுக எதிர்கொண்ட 2019 மக்களவை தேர்தல் மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டப்பேரவை தேர்தல், 2022-ல் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் குறிப்பிடும்படியான வெற்றியை அதிமுக பெறமுடியவில்லை. அதற்கு இரட்டை தலைமையும் ஒரு காரணம் என கட்சி நிர்வாகிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். தற்போது கட்சி ஒற்றைத் தலைமை யில் கீழ் வந்துள்ளதால், 2024 மக்களவை தேர்தல் மற்றும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றிவாகை சூடும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் உறுதிபட தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x