

கிரிக்கெட் விளையாட சேர்க்காத தால் ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர் பாக 9 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ராமேசுவரம் ராமராஜன் நகரைச் சேர்ந்தவர் மாரிக்குமார். சங்கு வியாபாரி. இவரது மகன் சேதுசூர்யா (18). மதுரை பெருங்குடியிலுள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாமாண்டு படித்து வரு கிறார். இவர் தனது ஊரைச் சேர்ந்த கல்லூரி நண்பர்களான ராஜேந்திரன், வேல்முருகன், ராமமூர்த்தி உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து கடந்த 23-ம் தேதி முதல் அதே பகுதியிலுள்ள விருஷமரத்து ஊருணி அருகே வீடு எடுத்து தங்கி, கல்லூரிக்கு சென்று வந்தார்.
விடுமுறை நாள் என்பதால் ஞாயிற்றுக்கிழமை மாலை நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடச் சென்றார். அப்போது பெருங்குடியைச் சேர்ந்த ஜான்பிரபு உள்ளிட்ட சில இளைஞர்கள் அங்குவந்து தங்களையும் கிரிக்கெட் விளையாட்டில் சேர்த்துக் கொள்ளுமாறு கூறி யுள்ளனர்.
ஆனால் மாணவர்கள் மறுத்து விட்டனர். அப்படியெனில் குறைந்தபட்சம் எங்கள் ஒவ்வொரு வருக்கும் தலா 3 பந்துகளை வீசுங்கள். நாங்கள் பேட் செய்துவிட்டு கிளம்பி விடுகிறோம் என பெருங்குடி இளைஞர்கள் கூறியுள்ளனர். அதற்கும் மாண வர்கள் மறுத்ததால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் இருதரப்பினரும் ஒருவரை யொருவர் தாக்கிக் கொண்டனர்.
மாணவர்களுக்கு மிரட்டல்
இதில் கோபமடைந்த பெருங் குடி இளைஞர்கள், ‘எங்கள் ஏரியாவில் இருந்து கொண்டு எங்களையே அடிக்கிறீர்களா என மிரட்டிவிட்டு சென்றனர். இதனால் பயந்துபோன கல்லூரி மாணவர்கள் விளையாட்டை பாதியிலேயே நிறுத்திவிட்டு, தங்களது அறைக்கு சென்றுவிட்டனர்.
இதற்கிடையே, ஞாயிற்றுக் கிழமை இரவு 8.30 மணியளவில் பெருங்குடியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்களுடன் ஜான்பிரபு கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த பகுதிக்கு வந்துள்ளார். அப்போது வீட்டுக்கு வெளியே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த சேதுசூர்யாவை அடையாளம் கண்டு அவரைத் தாக்கி, கத்தியால் குத்தினர்.
மருத்துவமனையில் அனுமதி
இதில் பலத்த காயமுற்ற சேதுசூர்யாவை நண்பர்கள் மீட்டு, அருகிலுள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் சேதுசூர்யா இறந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இச்சம்பவம் குறித்து பெருங்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன் பேரில் பெருங்குடியைச் சேர்ந்த ரெட் கார்த்திக் (35), முனியசாமி (30) உட்பட 9 போர் கைது செய்யப் பட்டனர்.