

முதியோரிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் இல்லங்கள், அவர்களை சரிவர கவனிப்பது இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.
வெளிமாநிலங்கள், வெளி நாடுகளுக்கு குடிபெயர்ந்துவிட்ட வர்கள் வயதான தங்கள் பெற் றோரை முதியோர் இல்லத்தில் விட்டுச்செல்வது வழக்கமாக உள்ளது. உற்றார், உறவினர் இல்லாமல் தனியாக இருக்கும் முதியவர்களும் தங்கள் சொத்து களை விற்றுவிட்டு கடைசிக் காலத்தில் முதியோர் இல்லத் துக்கு வருகின்றனர். வங்கி வைப்புத்தொகைக்கு வரும் வட்டியைக் கொண்டு, முதியோர் இல்லத்துக்கான கட்டணங்களை செலுத்துகின்றனர்.
தற்போது சென்னையில் மட்டும் சுமார் 235 முதியோர் இல்லங்கள் உள்ளன. இவை அனைத்தும் தனியார் அல்லது தொண்டு நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படுபவை. இந்த முதி யோர் இல்லங்களில் ஏராள மான முதியோர்கள் தங்கள் கடைசிக் காலத்தை கழித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கும் இல்லங்கள், அங்குள்ள முதியோரை சரியாக கவனித்துக் கொள்வதில்லை என்று புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் ஒரு முதியோர் இல்லத்தில் வசிக்கும் பெயர் வெளியிட விரும்பாத மூத்த வாசகி ஒருவர், ‘தி இந்து’வின் ‘உங்கள் குரல்’ சேவையைத் தொடர்பு கொண்டு கூறியதாவது:
கணவரை இழந்த நான் சொத்துகளை விற்றுவிட்டு முதி யோர் இல்லத்தில் தங்கியுள்ளேன். முன்வைப்பு தொகையாக ரூ.9 லட்சம் கட்டியுள்ளேன். மாதம் ரூ.18 ஆயிரம் வரை கட்டணம் செலுத்துகிறேன். பல வழிகளில் கூடுதல் கட்டணம் கேட்கின்றனர். ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ.9.50 வசூலிக்கின்றனர்.
ஆண்டுக்கு 10 சதவீத வாடகை உயர்வு என முதலில் கூறியவர்கள் தற்போது 20 சதவீதம் உயர்த்துகிறார்கள். கட்டணம் அதிகம் வாங்கினாலும் சரியாக கவனித்துக்கொள்வதில்லை. கடுமையாகப் பேசுகின்றனர். முதியோர் இல்லங்களை வரைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபற்றி முதியோர் ஆதரவு மையத்தின் (சீனியர் சிட்டிசன் சப்போர்ட் ஃபோரம்) செயலாளர் ஆர்.சுப்பாராஜிடம் கேட்டபோது, ‘‘முதியோரை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளன. முதியோர் இல்லங்கள் வசூலிக்கும் கட்டணத்துக்கு ஏற்ப அவர்களுக்கு வசதி செய்துதர வேண்டும். அவ்வாறு முதியோர் இல்ல நிர்வாகிகள் செயல்படாவிட்டால், நாங்களே முன்னின்று நடவடிக்கை எடுக்க வைப்போம்’’ என்றார்.