Published : 24 Feb 2023 04:31 AM
Last Updated : 24 Feb 2023 04:31 AM

பழனிசாமி தரப்பினரால் நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு முழு விவரம்

அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பழனிசாமி படத்துக்கு ஆரத்தி எடுத்த தொண்டர்கள். படம்: பு.க.பிரவீன்

புதுடெல்லி: ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என முக்கிய தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா, செல்லாதா என்பதை சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பிரதான சிவில் வழக்குகள்தான் முடிவு செய்யும் என உத்தரவிட்டுள்ளனர்.

கடந்த 2022 ஜூலை 11-ம் தேதிநடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்துநீக்கப்பட்டனர். இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் சென்னை உயர் நீதிமன்றமே விசாரிக்க உத்தரவிட்டது.

அதன்படி இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும், கடந்த ஜூன் 23-ம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என்றும், 30 நாட்களுக்குள் இருவரும் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் அமர்வு கடந்த ஆண்டு செப்.2-ம்தேதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில், ‘‘ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஜூன் 23 பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்காத சூழலில், அந்த பதவிகள் காலாவதியாகி விட்டதா என்றவிவகாரம் தொடர்பாக நாங்கள் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. எனவே, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்கிறோம்’’ என்று தீர்ப்பளித்தனர்.

இந்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளரான அம்மன் வைரமுத்து ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. ஓபிஎஸ் மற்றும் வைரமுத்து தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ரஞ்சித்குமார், குருகிருஷ்ணகுமார் ஆகியோரும், இபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யமா சுந்தரமும், அதிமுக அவைத்தலைவர் மற்றும் அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன், முகுல் ரோஹ்தகியும் ஆஜராகி வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர். தீர்ப்பு விவரம்:

ஜூலை 11-ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த பொதுக்குழு உரிய வழிமுறைகளை பின்பற்றி, சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டுதான் நடத்தப்பட்டுள்ளது. எனவே, அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வின் உத்தரவை உறுதி செய்கிறோம்.

ஆனால், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக எங்களிடம் எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை என்பதால், தீர்மானங்கள் குறித்துஎந்த உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை. அந்த தீர்மானங்கள் செல்லுமா, செல்லாதா என்பதை சென்னைஉயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பிரதான சிவில் வழக்குகள்தான் முடிவு செய்யும்.

அதேபோல, இந்த தீர்ப்பு, நிலுவையில் உள்ள பிரதான வழக்குகள் மீதான விசாரணைக்கு எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அந்தவழக்குகளை சுதந்திரமாக, சட்டத்துக்கு உட்பட்டு விசாரித்து தீர்வுகாண வேண்டும்.

தனி நீதிபதி உரிய அம்சங்களை கருத்தில் கொள்ளாமல், பொருத்தமற்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இதில் 2 நீதிபதிகள் அமர்வுசரியான உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியஇரு தரப்பும் இணைந்து, ஒற்றுமையாக செயல்பட தயாராக இல்லைஎன்பதே உண்மை. நடைமுறைகளுக்கு சாத்தியமற்ற செயல்பாடுகளை நீதிமன்றம் ஒருபோதும்உத்தரவாக பிறப்பிக்காது.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாட்டம்

சென்னை: கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி பழனிசாமி தரப்பில் கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. தொலைக்காட்சிகளில் இதுதொடர்பான செய்திகள் வெளியானதும், சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகம் முன்பு கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டனர். பட்டாசுகளை வெடித்தும், வெற்றிச் சின்னம் காட்டியும் உற்சாக நடனமாடினர். பரஸ்பரம் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இதேபோல, தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் இந்த வெற்றியை கொண்டாடினர்.

ஓபிஎஸ் அணிக்கு பெரிய பின்னடைவு: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, இரு அணியாக பிரிந்து நின்ற பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அணிகள் 2017 ஆகஸ்டில் இணைந்தபோதும், அடுத்தடுத்த நிகழ்வுகள் ஓபிஎஸ்ஸுக்கு பின்னடைவாகவே அமைந்தன. ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும், எந்த முடிவையும் இணை ஒருங்கிணைப்பாளரான இபிஎஸ்ஸிடம் கேட்டுதான் எடுக்க வேண்டிய நிலை இருந்தது. 2019 நாடாளுமன்ற தேர்தல், மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல், 2021 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வு, தொடர்ந்து நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர் தேர்வு ஆகியவற்றிலும் இபிஎஸ் கையே ஓங்கியிருந்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் இபிஎஸ்தான் அனைத்தையும் முடிவு செய்தார். அடுத்தடுத்து நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை என இபிஎஸ் பெயர் அடிபட, அதை தடுக்க முடியாமல் ஓபிஎஸ் திணறினார்.

இபிஎஸ் இடைக்கால பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டாலும், அதை தேர்தல் ஆணையம் ஏற்காதது ஓபிஎஸ் தரப்புக்கு ஆறுதலாக அமைந்தது. ஆனாலும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சின்னம் தொடர்பான வழக்கில், இபிஎஸ் ஆதரவாளரான அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது, ஓபிஎஸ்ஸுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு சரிந்துவிடக்கூடாது என்பதற்காக, ‘இரட்டை இலை’ சின்னத்துக்கு ஆதரவு என அறிவித்து, தனது வேட்பாளரை திரும்ப பெறும் நிலைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில், பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பு, ஓபிஎஸ்ஸுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x