

பசு, காளை, எருமை, ஒட்டகங் களை இறைச்சிக்காக விற்கவும், கொல்வதற்கும் தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இந்தியாவில் பசுக்கள், காளை கள், கிடாரிகள், கன்றுகள், எருமை கள், ஒட்டகங்களை இறைச்சிக்காக சந்தைகளில் விற்கவும், வாங்கவும் மத்திய அரசு 23.5.2017-ல் தடை விதித்தது. இந்நிலையில், மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை உத்தரவை அரசியலமைப்பு சட்டத் துக்கு விரோதமானது என அறி விக்கவும், அதுவரை மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்த தடை விதிக்கக் கோரியும் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வ கோமதி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று பொதுநலன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
மத்திய விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் 1960- ல் இறைச்சிக் காக விலங்குகளை விற்கவும், பலியிடவும், சாப்பிடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தச் சட்டத்துக்கு விரோதமாக பசுக்கள் உள்ளிட்ட விலங்குகளை இறைச்சிக்காக வெட்டவோ, வாங்கவோ தடை விதிக்கும் பிராணிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைத் தடுக்கும் (விற் பனை சந்தை நெறிப்படுத்து தல்-2017) என்ற விதியை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விவாதிக்க வில்லை. மாநில அரசுகளுடன் ஆலோசிக்கவில்லை. மத நிகழ்ச்சி களில் பலியிடுவதற்கும் பிராணி களை வாங்கவும், விற்கவும் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த தொழிலில் உள்ள லட்சக் கணக்கான குடும்பங்கள், மாடு விற்பனையாளர்கள், விவசாயிகள், சார்பு தொழிலில் உள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.
இந்தியாவில் ஒரு மனிதன் கவுரவமாக உயிர் வாழவும், தான் விரும்பியதைச் சாப்பிடவும் அரசியலமைப்புச் சட்டம் உரிமை வழங்கியுள்ளது. அந்த உரிமையில் யாரும் தலையிட முடியாது.
மொத்தத்தில் மத்திய அரசின் தடை உத்தரவு அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 14, 19, 21, 25, 29 ஆகியவற்றை மீறுவதாக அமைந்துள்ளது. மேலும் ஏழை விவசாயிகள், விற்பனையாளர்கள், இறைச்சிக் கடை நடத்துவோர், இறைச்சி உண்ணும் பெரும்பான் மையான மக்களின் மீது தொடுக் கப்பட்ட தாக்குதல் ஆகும். எனவே மத்திய அரசின் தடை உத்தரவை அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும். அதுவரை அந்த உத்த ரவை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட் டிருந்தது.
இதே கோரிக்கைக்காக மதுரை களிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறி ஞர் பி.ஆசிக்இலாகிபாபா என்பவ ரும் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.வி.முரளிதரன், சி.வி.கார்த்திகேயன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன.
மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் வாதிடும்போது, “கால்நடைகளை சந்தைப்படுத்துதலை முறைப்படுத் தவே இந்த விதி கொண்டுவரப்பட் டுள்ளதாக மத்திய அரசு கூறுகி றது. ஆனால் கால்நடைகள் சந்தைப் படுத்துதல் மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. அதில் மத்திய அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.
ஒருவர் என்ன சாப்பிட வேண் டும் என்பது அவரது தனி உரிமை. ஒருவர் இதை சாப்பிட வேண்டும், இதையெல்லாம் சாப்பிடக்கூடாது என சொல்வதற்கு யாரும் உரிமை கிடையாது. மத்திய அரசு விவசாயி கள், பொதுமக்கள் மீது அக்கறை இல்லாமல் இந்த உத்தரவை பிறப் பித்துள்ளது. எனவே உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என்றார்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ஆர்.சுவாமிநாதன் வாதிடும் போது, “உச்ச நீதிமன்ற உத்தரவுப் படியே மாட்டிறைச்சிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தர விட்டுள்ளது. கடந்த 2014-ல் நேபா ளத்தில் 5 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் கடிமை எனும் விழா வில் விலங்குகள் கொடூரமாகத் துன்புறுத்தப்படும். இதையடுத்து கவுரி என்பவர் விலங்குகள் கொடூரமாக கொல்லப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி விலங்குகளைப் பாதுகாக்க உரிய விதிகளை உருவாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. அதன்படியே இந்த விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் மாடுகளைக் கொல்வ தற்கு தடை விதிக்கப்படவில்லை. இறைச்சிக்காக விற்பதற்கு தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு உரிய பதிலளிக்க மத்திய அரசுக்கு போதிய கால அவகாசம் தர வேண்டும். அதுவரை இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக்கூடாது” என்றார்.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்தியாவில் 1960-ல் கொண்டு வரப்பட்ட மத்திய விலங்குகள் வதை தடை சட்டத்தின் பின்புலத்தை பார்க்கும்போது மனுதாரர்கள் தரப்பு வாதத்தில் வலு இருப்பதாக நீதிமன்றம் கருதுகிறது. மத்திய அரசின் வாதத்தை முழுமையாக ஏற்க இயவில்லை. ஏனெனில் இந்த தடை சட்டத்தின் மூலம் பிறப்பிக் கப்படவில்லை. நிர்வாக உத்தரவின் மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாட்டிறைச்சிக்குத் தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க போதுமான அடிப்படை முகாந்திரம் உள்ளது.
விலங்குகள் வதை தடுப்பு மத்திய, மாநில அரசுகள் இணைந்த பொதுப்பட்டியலில் (கன்கரன்ட்) உள்ளது. அதே நேரத்தில் விலங்குகளை பலியிடுவது மாநில அரசின் தனிப்பட்டியலில் உள்ளது. இந்த பின்புலத்தில் புதிதாக கொண்டுவரப்பட்ட விதி மதசார்பற்ற நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்ட விதிகளுக்கு உட்பட்டதா என்று பார்க்க வேண்டியதுள்ளது. மேலும் இந்தச் சட்டம் மத்திய, மாநில அரசுகள் இணைந்த பொதுப்பட்டியல் இருப்பதையும் கவனிக்க வேண்டியதுள்ளது. இத னால் மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டியது அவசியம் என நீதிமன்றம் கருதுகிறது.
எனவே மத்திய அரசின் விதி களுக்கு 4 வாரம் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மத்திய உள்துறை செயலர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர், தமிழக உள்துறை செயலர் ஆகியோர் 4 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டா?
மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தடை விதித்திருப்பதால், ஒரு விஷயம் தொடர்பாக மத்திய அரசு நாடு முழுவதும் அமலாகும் வகையில் பிறப்பிக்கும் உத்தரவுக்கு எதிராக ஒரு மாநிலம் சார்ந்த உயர் நீதிமன்றம் தடை விதிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.காந்தி கூறியதாவது: மத்திய அரசின் சட்டமாக இருந்தாலும், மாநில அரசின் சட்டமாக இருந்தாலும் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களுக்கு கட்டுப்பட்டதுதான். இதனால் மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து மாநில உயர் நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்ய முடியும். அந்த மனுக்களின் மீது உயர் நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்கவும் முடியும்.
மத்திய அரசு காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் காளையைச் சேர்த்து உத்தரவிட்டதால், ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனபோது, இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில்தான் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் தடையாணை பிறப்பித்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கியது.
மத்திய அரசு நாடு முழுவதும் கொண்டுவந்த ‘நீட்’ தேர்வுக்கு எதிராக உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டு தடையாணை பெறப்பட்டது. இதன் பிறகு நீட் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஒருவர் மனு தாக்கல் செய்தபோது, நீட் தேர்வுக்கு உயர் நீதிமன்ற கிளை தடை விதித்திருப்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். உயர் நீதிமன்ற கிளையின் உத்தரவை எதிர்த்து மத்திய அரசு இங்கேயே தடையை விலக்கக் கோரி மனு தாக்கல் செய்யலாம் அல்லது உச்ச நீதிமன்றம் செல்லலாம் என்றார்.