

‘நீட்’ தேர்வில் விலக்கு தரா விட்டால் குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழகம் கலந்து கொள்ளக்கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்தார்.
அரசு டாக்டர்களுக்கு மருத்துவப் பட்டமேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீட்டை காத்திட மத்திய அரசு உடனடியாக அவசர சட்டம் கொண்டு வரவேண்டும். தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை, முதுநிலை இடங் களுக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு வழங்கிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக சமத்துவத்துக் கான டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் முனவர் பாஷா, திமுக சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் கண்ணதாசன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், மருத்துவ மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது தா.பாண்டியன் செய்தியாளர் களிடம் பேசியதாவது:
மத்திய அரசு எந்த திட்டத்தைப் போட்டாலும், மாநில அரசையும், சம்பந்தப்பட்ட மக்களையும் கேட்பது இல்லை. டெல்லியில் போடும் உத்தரவை மிரட்டி நடவடிக்கை எடுக்கிறது. டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். அவர்களைச் சென்று பார்க்காத பிரதமர் மோடி, காட்டை அழித்து கட்டிய ஆதியோகி சிலையைத் திறந்து வைக்க வருகிறார். ’நீட்’ தேர்வை பல மாநிலங்கள் எதிர்க்கவில்லை. தமிழகம் மட்டும்தான் எதிர்க்கிறது என்கிறார்கள். விழித்தவர்கள் எதிர்க்கிறார்கள். குறுக்கு வழியில் இடஒதுக்கீட்டை அழிக்கக் கூடாது. ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும். ஒப்புதல் தராவிட்டால் குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழகம் கலந்துகொள்ளக் கூடாது.
இவ்வாறு தா.பாண்டியன் தெரிவித்தார்.