

நடிகர் ரஜினிகாந்த் பாஜகவில் இணைவாரா என்ற கேள்விக்கு தேசிய தலைவர் அமித் ஷா அதிரடியாக பதில் அளித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கடந்த சில தினங்களாக ரசிகர்களை சந்தித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் நுழையப் போவதை சூசகமாக தெரிவித்திருந்தார். இதனால் அவர் பாஜகவில் இணைவாரா? அல்லது தனிக்கட்சி தொடங்குவாரா என்ற விவாதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் களைக்கட்ட தொடங்கியுள்ளது.
இந்நிலையில் நேற்று தனியார் டிவிக்கு பேட்டியளித்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிடம் ரஜினிகாந்த் பாஜகவில் இணைவாரா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமித் ஷா, ‘‘பாஜகவில் இணைவது குறித்த முடிவை ரஜினிதான் எடுக்க வேண்டும். ரஜினி மட்டுமல்ல நல்லவர்கள் யார் வந்தாலும் அவர்களை பாஜக வரவேற்கும்’’ என்றார்.
குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக யாரை தேர்வு செய்து வைத்துள்ளது என்ற கேள்விக்கு, அமித்ஷா, ‘‘குடியரசுத் தலைவராக யார் வர வேண்டும் என்பது குறித்து எனக்கும் தனிப்பட்ட ஆசை இருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்த கட்சியினரும் விவாதித்து தான் இதில் முடிவு எடுக்க முடியும். இதுவரை அவர் யார் என்பது முடிவு செய்யப்படவில்லை’’ என்றார். மேலும் காஷ்மீர் விவகாரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பி இருக்கிறதாகவும் கூறினார்.
மோடி தலைமையிலான மத்திய அரசு 3-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலை யில், மக்கள் மத்தியில் பாஜக மீதான நம்பிக்கை அதிகரித் திருப்பதாகவும், ஜனநாயக நாட்டில் மக்கள் தீர்ப்பை விட வேறு சான்றிதழ் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.