

அகில இந்திய அளவிலான விவசாய சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று டெல்லி புறப்பட்டனர்.
முன்னதாக, அச்சங்கத்தின் தலைவர் பி.அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 40 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தினோம். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் பழனிசாமி ஆகியோர் 15 நாட்களில் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாகக் கூறி அழைத்து வந்தனர். ஆனால், இதுவரை எதுவும் நடக்கவில்லை.
இந்தச் சூழலில், டெல்லி ஜந்தர் மந்தரில் வரும் 21-ம் தேதி அகில இந்திய அளவில் 300-க்கும் அதிகமான விவசாய சங்கங்களை அழைத்து ஆலோசனை நடத்தி, அகில இந்திய அளவில் போராட்டக் குழுவை ஏற்படுத்த உள்ளோம். அதைத் தொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.