Published : 24 Feb 2023 04:13 AM
Last Updated : 24 Feb 2023 04:13 AM

சைக்கிளில் சென்று ஆய்வு நடத்திய திருப்பத்தூர் எஸ்.பி. பாலகிருஷ்ணன்

மிதிவண்டியில் சென்ற திருப்பத்தூர் எஸ்.பி., டாக்டர் பாலகிருஷ்ணன்.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் எஸ்.பி., டாக்டர் பால கிருஷ்ணன் தனது வீட்டில் இருந்து 25 கி.மீ., தொலைவுள்ள நாட்றாம்பள்ளி காவல் நிலையத்துக்கு மிதிவண்டியில் சென்று நேற்று திடீர் ஆய்வு நடத்தினார்.

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் காவல் துறை சார்பில் பொதுமக்க ளுக்கான குறைதீர்வு கூட்டம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், நேற்று முன்தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தின் போது ஏராளமான மனுதாரர்கள் நாட்றாம் பள்ளி காவல் நிலையத்தில் பணியாற்றக்கூடிய காவல் ஆய்வாளர் முதல் காவலர்கள் வரை சரிவர தங்களது கடமையை செய்வதில்லை என்றும், புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் மனுக்களை வாங்காமலும், அப்படியே வாங்கினாலும் அந்த மனுக்கள் மீது வழக்குப்பதிவு செய்வதில்லை. புகார்தாரர்களை ஆய்வாளர் சாந்தி உட்பட அனைவரும் மிரட்டுவதாக அடுக்கடுக்கான புகார் மனுவை எஸ்.பி., யிடம் வழங்கினர்.

மனுக்களை பெற்ற எஸ்.பி.,டாக்டர் பாலகிருஷ்ணன், வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) நிலவழகனிடம் நாட்றாம் பள்ளி காவல் நிலையத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும், அங்கு பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது காவல் ஆய்வாளர் எடுத்த நடவடிக்கைகள் என்பதை விளக்க வேண்டும் என நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

இந்நிலையில், திருப்பத்தூர் அடுத்த ஜோலார்பேட்டை அருகேயுள்ள தாமலேரிமுத்தூர் மேம்பாலம் அருகே எஸ்.பி., டாக்டர் பாலகிருஷ்ணனின் குடியிருப்பு உள்ளது. நேற்று காலை 6.30 மணியளவில் வீட்டில் இருந்து மிதிவண்டியில் புறப்பட்ட எஸ்.பி., டாக்டர் பாலகிருஷ்ணன் மிதி வண்டியிலேயே சுமார் 25 கி.மீ., தொலைவுள்ள நாட்றாம்பள்ளி காவல் நிலையத்துக்கு சென்றார்.

சுமார் ஒரு மணி நேரத்தில் மிதிவண்டியில் நாட்றாம்பள்ளி காவல் நிலையத்தை எஸ்.பி., அடைந்ததும், அங்கு பணியில் இருந்த ஒரு சில காவலர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் என யாருமே அப்போது பணியில் இல்லை. காவல் நிலையத்துக்குள் சென்ற எஸ்.பி., அங்கு வருகைப் பதிவேடு, பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள், பணியில் உள்ள காவலர்கள் விவரம், ஆயுதம் பராமரிப்பு, நிலுவையில் உள்ள வழக்குகளில் தற்போதைய நிலவரம் என அனைத்தையும் ஆய்வு செய்தார்.

இந்த தகவலறிந்த ஆய்வாளர் சாந்தி உட்பட மற்ற காவலர்கள் அரை மணி நேரத்தில் அனைவரும் காவல் நிலையத்தில் ஆஜராகினர். அவர்களிடம், பணியில் மெத்தனமாக யாரும் இருக்கக்கூடாது. 24 மணி நேரமும் காவலர்கள் பணியில் ஈடுபட வேண்டும். புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கன்னியத்துடனும், கடமை உணர்வுடன் செயல்பட வேண்டும்.

பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார் மனுக்கள் நாட்றாம்பள்ளி காவல் நிலையம் தொடர்புடையதாகவே வருகின்றன. இனி வரும் காலங்களில் இந்த நிலை தொடர்ந்தால் அனைவரும் ஆயுதப்படைக்கு செல்ல வேண்டி வரும் என எச்சரித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x