முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் நடைபெறும் குழப்பங்களுக்கு அதிமுக, திமுகவே காரணம்: ராமதாஸ் குற்றச்சாட்டு

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் நடைபெறும் குழப்பங்களுக்கு அதிமுக, திமுகவே காரணம்: ராமதாஸ் குற்றச்சாட்டு
Updated on
1 min read

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் நடக்கும் பிரச்னைகளுக்கு திமுக அதிமுக ஆகிய கட்சிகளே காரணம் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களில் 50 விழுக்காட்டை அரசு ஒதுக்கீட்டுக்கு பெற்றுத் தராததற்காக தமிழக அரசுக்கும், இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி தலா ரூ.1 கோரி அபராதமும் விதித்திருக்கிறது. தனியார் கல்லூரிகளுக்கு சாதகமாக செயல்பட்டதற்காக மிகப்பெரிய தலைகுனிவை அரசு சந்தித்துள்ளது.

தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் மீதமுள்ள 50% இடங்களும் அரசு நடத்தும் ஒற்றைச் சாளர கலந்தாய்வின் மூலம்தான் நிரப்பபட வேண்டும். எனினும், இதற்கு தனியார் கல்வி நிறுவனங்கள் அவற்றின் விருப்பப்படி கட்டணம் நிர்ணயித்துக் கொள்ளும் என்பதுதான் விரும்பத்தகாத ஒன்றாகும். இதன் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களை தனியார் கல்வி நிறுவனங்கள் ஏலத்தில் விடாத குறையாக விற்பனை செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் நிரந்தர முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக போராட்டம் நடைபெறும் நிலையிலும் நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையிலும் ராமதாஸ் இந்த அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in