சுகாதாரமற்ற நிலையில் போக்குவரத்து கேன்டீன்கள்: தரமற்ற உணவு வழங்குவதாக ஊழியர்கள் புகார்

சுகாதாரமற்ற நிலையில் போக்குவரத்து கேன்டீன்கள்: தரமற்ற உணவு வழங்குவதாக ஊழியர்கள் புகார்
Updated on
1 min read

போக்குவரத்து பணிமனைகளில் இருக்கும் கேன்டீன்களில் சுகாதாரமற்ற, தரமற்ற உணவுகள் வழங்குவதால், சாப்பிட முடியாமல் அவதிப்படுவதாக ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 838 வழித்தடங்களில் 3,688 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும் சராசரியாக 50 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். இதன் மூலம் சராசரியாக ரூ.2.80 கோடி வசூலாகிறது. சென்னையின் மாநகர பகுதியில் எல்லை விரிவாக்கத்தின் காரணமாக புறநகர் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் உட்பட மொத்தம் 24,456 பேர் பணியாற்றி வருகின்றனர்.

மாநகர போக்குவரத்து ஊழியர்களுக்கு மதிய உணவு அளிக்கும் வகையில் பல்லவன் இல்லம், சின்னமலை, வடபழனி, அடையார், வியாசர்பாடி, திருவொற்றியூர், தாம்பரம் உட்பட 33 பணிமனைகள், 3 ஓர்க் ஷாப்கள் என 36 இடங்களில் கேன்டீன் வசதி உள்ளது. ஊழியர்களுக்கு மதிய சாப்பாடும் இங்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், வழங்கப்படும் சாப்பாடு மற்றும் குடிநீர் தரமில்லாமல் இருப்பதாக ஊழியர்கள் புகார் கூறுகின்றனர். மேலும், பல இடங்களில் கேன்டீன் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகவும் போக்குவரத்து ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நேதாஜி போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் வெ.தளபதி, துணை பொதுச்செயலாளர் கே.அன்பழகன் ஆகியோர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

முன்பெல்லாம் மாநகர போக்குவரத்துக் கழக பணிமனைகளில் வழங்கப்படும் மதிய உணவுகள் தரமானதாக இருக்கும். கேன்டீன்கள் சுகாதாரமாக இருக்கும். மதியத்தில் வாழை இலையில் சாப்பாடு போட்டு, அதில், கூட்டு பொறியல், அப்பளம் மற்றும் தினமும் ஒரு வகை காய்கறி இருக்கும். இதனால், ஊழியர்கள் சாப்பிட ஆர்வமாக வருவார்கள். சுவையுடன் சத்துக்கள் நிறைந்த உணவாக இருக்கும்.

ஆனால், இப்போது, பெரும்பாலான பணிமனைகளில் இருக்கும் கேன்டீன்கள் சுகாதாரமற்ற நிலையில் இருக்கின்றன. உணவு வழங்கும் பிளேட்கள் சுத்தமாக இல்லை, அப்பளம் வைப்பதில்லை, சாப்பாடு பெயரளவுக்கே போடுகிறார்கள். அங்கு வழங்கப்படும் குடிநீரும் சுகாதாரமாக இல்லை. மேலும், ஒவ்வொரு பணிமனையிலும் தலா 50 டோக்கன்கள்தான் வழங்கப்படுகின்றன. ஆனால், நிர்வாகத்திடம் ஒவ்வொரு பணிமனையிலும் 100 டோக்கன்கள் வழங்கியுள்ளதாக கணக்கை காட்டி பணத்தை வசூலித்துக் கொள்கின்றனர். எனவே, நிர்வாகம் இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in