

நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் கோவை மாநகராட்சி 16-வது இடத்தைப் பெற்றுள்ளது. தூய்மை இந்தியா திட்ட ஆய்வின்போது மக்கள் அதிருப்திகரமான முடிவுகளை தெரிவித்ததாலேயே முதல் 10 இடங்களுக்குள் கோவை இடம் பெற முடியாமல்போனது என கூறப்படுகிறது.
இந்தியாவில் கடந்த 2014 அக்.2-ம் தேதி மத்திய அரசின் தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள கிராம, நகரப்புறங்களில் தூய்மையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லாத பகுதிகளாக மாற்றி தனிநபர் கழிப்பிடங்களையும், பொதுக்கழிப்பிடங்களையும் கட்டிக் கொடுப்பது என்ற நோக்கத்தில் கடந்த ஆண்டு முழுவதும் பணிகள் நடைபெற்றன. அடுத்தகட்டமாக திடக்கழிவு மேலாண்மையில் தன்னிறைவு என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தூய்மை பாரதம் இயக்கத்தில் இணைக்கப்பட்ட 500 நகரங்களுக்கு இடையேயான தரவரிசைப் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
‘ஸ்வச் ஸர்வெக்ஷன் 2017’ என்ற அந்த பட்டியலில் தமிழகத்தில் திருச்சி மாநகரம் 6-வது இடத்தையும், கோவை மாநகரம் 16-வது இடத்தையும் பெற்றுள்ளன. 2016-ம் ஆண்டு வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் 75 நகரங்களுக்கு இடையேயான போட்டியில், திருச்சி 2-வது இடத்தையும், கோவை 18-வது இடத்தையும் பிடித்தன.
ஆனால் இந்த ஆண்டு தரவரிசையில் திருச்சி 4 இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் கோவை மாநகராட்சி 2 இடங்கள் முன்னேறி 16-வது இடத்தை பிடித்து பெருமை சேர்த்துள்ளது.
2000-க்கு 1716 புள்ளிகள்
கோவை மாநராட்சி தூய்மை பாரதத் திட்ட அதிகாரிகள் கூறும்போது, ‘தூய்மைக்காக மாநகராட்சி மேற்கொண்டுள்ள திட்டங்களுக்கு 900 புள்ளிகளும், மத்திய அரசு நியமித்த குழு நடத்திய ஆய்வின் அடிப்படையில் 500 புள்ளிகளும், மக்கள் வழங்கும் கருத்துகள் அடிப்படையில் 600 புள்ளிகளும் என மொத்தம் 2000 புள்ளிகள் வழங்கப்படுகின்றன. அதில் திருச்சி 1808 புள்ளிகளையும், கோவை 1716 புள்ளிகளையும் பெற்றுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சியில் இதுவரை சுமார் 4000 தனிநபர் கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன. 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுக்கழிப்பிடங்களும், 330 பொதுக்கழிப்பிடங்களும் மராமத்துப் பணிகளும் செய்யப்பட்டுள்ளன. இதனால் திறந்தவெளிக் கழிப்பிடம் பெருமளவில் தவிர்க்கப் பட்டுள்ளது. அதேபோல, திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் வீடுவீடாக குப்பைகளை சேகரித்து தரம் பிரிப்பது, பிளாஸ்டிக் ஒழிப்பு, மட்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிப்பு, மண்புழு வளர்ப்பு போன்ற பல்வேறு பணிகள் நடக்கின்றன. இவை மட்டுமின்றி, தொழிலாளர்கள் எண்ணிக்கை, கட்டிடக் கழிவு மேலாண்மை, பயோமெட்ரிக் வருகைப்பதிவு உள்ளிட்டவையும் இந்த தேர்வில் முக்கியத்துவம் பெற்றன.
ஏற்கெனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோவை இடம் பெற்றிருப் பதாலும், தூய்மை இந்தியா திட்ட பட்டியல் அடிப்படையில் இந்தியாவில் முக்கியமான நகரமாக கருதப்படுகிறது. இதன் மூலம் வளர்ச்சிப் பணிகளுக்கு மத்திய அரசின் உதவிகளும், நிதி ஒதுக்கீடும் கோவைக்கு கூடுதலாக கிடைக்கும் வாய்ப்புள்ளது.’ என்றனர்.
மக்கள் அதிருப்தி காரணம்
‘ஸ்வச் ஸர்வெக்ஷன்’ தேர்வுக்குழு நடத்திய ஆய்வில், செயல்படுத்தப்பட்ட தூய்மைத் திட்டங்களுக்கு 900-க்கு 867 புள்ளிகள் கிடைத்துள்ளது. அதேபோல, கியூசிஐ என்ற அமைப்பு நடத்திய நேரடி ஆய்வில் 500-க்கு 431 புள்ளிகள் கோவை பெற்றது. ஆனால் திட்டங்கள் எந்த அளவுக்கு பயனளித்தன என மக்களில் 36,709 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. 600 புள்ளிகள் கிடைக்கக்கூடிய இந்த பிரிவில், கோவை மாநகராட்சி 352 புள்ளிகளையே பெற்றது. சுமார் 50 புள்ளிகள் கூடுதலாக இருந்திருந்தால் கோவை முன்னணிக்கு வந்திருக்கும்.
கோவை மாநகரில் 16 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். மாநகராட்சி பல்வேறு இடங்களில் மக்களுக்கான தூய்மைத் திட்டங்கள் செயல்படுத்தியிருந்தாலும், அவை மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மத்திய அரசு நடத்திய ஆய்வுகளில் அனைத்துப் பிரிவுகளிலும் முன்னணியில் இருந்த கோவை மாநகராட்சி, இறுதியாக பொதுமக்களின் கருத்துகளில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. பொதுமக்கள் கருத்துகளிலும் நல்ல மதிப்பெண் கிடைத்திருந்தால் முதல் 5 இடங்களுக்குள் கோவை வந்திருக்கும் என கூறப்படுகிறது.