

டிடிவி தினகரனின் ஜாமீன் மனு மீதான விசாரணையை டெல்லி நீதிமன்றம், வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக தேர்தல் ஆணை யத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா தரகர்கள் நரேஷ், பாபு ஆகியோரை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவர்கள் 5 பேரும் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
டிடிவி தினகரன், சுகேஷ் ஆகியோர் டெல்லி தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர். தினகரன் மனு மீதான விசாரணையை நடத்த நேற்று காலை நீதிபதி பூனம் சவுத்ரி தயாரானார். அப்போது தினகரனின் வழக்கறிஞர் ஆஜராகி, ‘‘ஜாமீன் மனு மீதான விசார ணையை மற்றொரு நாளுக்கு ஒத்திவைக்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, டிடிவி தினகரனின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதற்கிடையே, சுகேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டார்.