

வணிக வரி மாவட்ட துணை ஆணையர் மற்றும் கோட்ட இணை ஆணையர் அலுவலகங்களில் இனி திங்கள்கிழமைதோறும் வணிகர் குறை தீர்க்கும் நாள் கடைபிடிக்கப்படும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார். சட்டப் பேரவையில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அத்துறையின் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியதாவது:
2013-14-ல் சென்னை மண்டலத்தில் உள்ள 4 வணிகவரி கோட்டங்களின் எல்லைகள் மறுசீரமைக்கப்பட்டன. அதுபோல், பிற மண்டலங்களில் உள்ள வணிகவரி கோட்டங்களுக்குள்ளாகவே, வணிகவரி மாவட்டங்களுக்கு இடையேயான பணிப் பகிர்மானம் ஒரே சீராக இருக்கும் பொருட்டு, வணிகவரி சரகங்களின் எல்லை மறுசீரமைக்கப்படும்.
திருச்சியில் முதல்வரால் திறந்துவைக்கப்பட்ட வணிகவரிப் பணியாளர் பயிற்சி நிலைய கட்டிடத்துக்கு கூடுதல் வசதிகளை செய்ய ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கப்படும்.
துறை இணை ஆணையர்களுக்கு திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்திலும், பிற அலுவலர்களுக்கு துறையின் பயிற்சி நிலையங்களிலும் பயிற்சி வழங்குவதற்கு தேவைப்படும் வசதிகளை செய்து தருவதற்கு ரூ.1.54 கோடி நிதி ஒதுக்கப்படும்.
வணிகவரித் துறையின் செயல்பாடுகள் தடையில்லாமல் நடைபெறுவதற்கும், வரி வசூல் சிறப்பாக நடைபெறுவதற்கும், ரூ.1.07 கோடியில் 18 புதிய வாகனங்களும், சென்னையில் உள்ள 2 செயலாக்கக் குழுக்களுக்கு ரூ.28 லட்சத்தில் 4 புதிய வாகனங்களும் வாங்கப்படும்.
வணிகர்களுக்கும், வணிகவரித் துறை அலுவலர்களுக்கும் இடையே உள்ள தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றை மேம்படுத்தும் பொருட்டு, ஒவ்வொரு வணிக வரி மாவட்ட துணை ஆணையர் மற்றும் கோட்ட இணை ஆணையர் அலுவலகங்களில் திங்கள்கிழமை தோறும் வணிகர் குறை தீர்க்கும் நாள் கடைபிடிக்கப்படும்.
வரி ஏய்ப்பு குறித்த தகவல் அளிப்போருக்கு பரிசளிப்புத் தொகையை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும். அதிக அளவிலான வரி ஏய்ப்பை கண்டறிந்து வருவாய் ஈட்டித்தரும் துறை அலுவலர்களுக்கும் தனி நபர்களுக்கும் சில குறிப்பிட்ட இனங்களில் தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்றார் அமைச்சர்.