

நீட் நுழைவுத் தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட கெடுபிடி சோதனைகளால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கைகள் விவரம்:
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:
நீட் நுழைவுத் தேர்வு மையங்களில் தேர்வு எழுத வந்த மாணவர்களை அரசு அலுவலர்கள் நடத்திய முறை மாண வர்களுக்கு மன உளைச்சலையும், கடும் கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தவறுக்கு இடம் கொடுக்காமல் நீட் நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியதற்காக தேர்வு மையங்களில் நடந்த கெடு பிடிகளும், அருவருக்கத்தக்க செயல்களும் வன்மை யான கண்டனத்துக்கு உரியது.
மாணவிகளின் தலைமுடியைக் கலைந்து சோதனை செய்ததுடன், சுடிதாரில் முழுக்கை இருந்தால் வெட்டி வீசியும், மாணவிகள் துப்பட்டா மேலாடை அணியவும் அனுமதிக்காமல் கெடுபிடி செய்துள்ளனர். மாணவர்களின் முழுக் கை சட்டையை கத்திரிகொண்டு வெட்டி அலங்கோலப்படுத்தி இருக்கின்றனர். இவ்வளவு கெடுபிடிகளையும் தாங்கிக் கொண்டு மாணவர்களால் எப்படி நிம்மதி யாக தேர்வு எழுதியிருக்க முடியும்?
மாநில அரசுகளின் உரிமைகளை நசுக்கி அழிக்கும் வகையில், மத்திய அரசு கல்வித் துறையில் ஆதிக்கம் செலுத்துவதை இனியும் அனுமதிக்கக்கூடாது. கல்வித் துறையை மத்திய, மாநில அரசுகளின் பொதுப் பட்டியலில் இருந்து நீக்கி, மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்:
நீட் தேர்வு மையங்களில் அதீதக் கட்டுப்பாடுகள், ஏற்றுக்கொள்ள முடியாத கெடுபிடிகள் காட்டப்பட்டதால் வரம்பு மீறிய செயல்கள் நடைபெற்றுள்ளன. இது தேர்வு எழுதச் சென்ற மாணவர்களை உளவியலாக பெரிதும் பாதித்துள்ளது. இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
எல்லைதாண்டிய பயங்கரவாதிகளிடம் நடந்துகொள்வதுபோல் மாணவர்க ளிடம் நடந்து கொண்டவிதம் அருவருப்பூட்டுகிறது. அதிர்ச்சி அளிக்கிறது.
இதுபோன்ற அநாகரிகச் செயலுக்கு அதிகாரம் அளித்தது யார்? அலுவலர்களில் யார் யார் வரம்பு மீறியவர்கள் என்று விசாரித்து அவர்கள் மீது மத்திய, மாநில அரசுகள் உரிய ஒழுங்குநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
திக தலைவர் வீரமணி:
‘நீட்’ தேர்வு எழுத வந்த மாணவர்களை அதிகாரிகள் நடத்திய விதம் வெட்கப்படத்தக்கது. கடும் கண்டனத்துக் குரியது. கேரளாவில் பெண்களின் உள்ளாடைவரை சோதித்தனர். காதுகளில் அணிந்திருந்த நகைகளை கழற்றச் சொன்னதோடு நில் லாமல், காதுக்குள்ளும் குடைந்து பார்த்தனர் என்பதெல்லாம் அருவருப் பானதல்லவா? தேர்வு எழுதும் மாணவர்கள் எல்லாம் தீவிரவாதிகளா?
தேர்வு எழுதுவதற்குமுன் மாணவர் களை மன உளைச்சலுக்கு ஆளாக்கிட வேண்டும் என்ற கெட்ட எண்ணம் இதன் பின்னணியில் இருக்கக்கூடும். மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்.