

தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கடல் காற்று வீசி வருவதாலும், சில இடங்களில் கோடை மழை பெய்து வருவதாலும் முக்கிய நகரங்களில் கடந்த 2 நாட் களாக வெப்பநிலை குறைந்து வருகிறது.
இந்த ஆண்டு நாடு முழுவதும் கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் கடந்த மார்ச் மாதமே எச்சரித்து இருந்தது. மேலும் தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்த நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங் களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்திருந்தது. ஏப்ரல் மாதம் தொடங்கியதும், வெப்பம் மேலும் அதிகரித்து, அதிகபட்சமாக 14 நக ரங்களில் 100 டிகிரி ஃபாரன் ஹீட்டுக்கும் அதிகமான வெப்ப நிலை பதிவானது. கடந்த மாதத்தில், முந்தைய 17 ஆண்டு களில் இல்லாத அளவாக ஏப்ரல் மாதத்தில் வேலூரில் 111 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதி வானது. சென்னையிலும் அதிக பட்சமாக 106 டிகிரி ஃபாரன் ஹீட் வரை வெப்பநிலை பதிவாகி யிருந்தது. இதனால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை விடப்பட்டன.
இந்நிலையில் கடந்த இரு நாட்களாக முக்கிய நகரங்களில் வெப்பத்தின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இது தொடர் பாக சென்னை வானிலை மைய அதிகாரி ஒருவர் கூறிய தாவது:
வங்கக் கடலில் மாருதா புயல் உருவானதால் தமிழக பகுதியில் இருந்த ஈரப்பதம் உறிஞ்சப்பட்டது, காற்று வீசும் தன்மை மாறியது, கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையில் இருந்து தமிழகத்தை நோக்கி கடல் காற்று வீசாதது போன்ற காரணங்களால் தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில் வெப்பம் அதிகமாக இருந்தது. கடந்த இரு நாட்களாக பிற்பகலில் கடல் காற்று வீசி வருகிறது. மேலும் வெப்பம் அதிகமாக உள்ள நகரங்களில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங் களில் கோடை மழையும் பெய்து வருகிறது. அதன் காரணமாக முக்கிய நகரங்களில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் சற்று குறைவாகத்தான் இருக்கும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்பச் சலனத்தால் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நேற்றைய நிலவரப்படி அதிகபட்ச வெப்பநிலையாக பாளையங்கோட்டை 104.9 டிகிரி ஃபாரன்ஹீட், கரூர் பரமத்தி 104, வேலூர் மற்றும் திருச்சி 102.92, மதுரை 102.38, திருத்தணி 102.2, சேலம் 101.12 சென்னை 98.24 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.