Published : 16 May 2017 08:30 PM
Last Updated : 16 May 2017 08:30 PM

தமிழக சட்டப்பேரவையை கூட்டுவதற்கு முதல்வரும், பேரவைத் தலைவரும் முன்வர வேண்டும்: திருநாவுக்கரசர்

தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்டுவதற்கு முதல்வரும், பேரவைத் தலைவரும் முன்வர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நீண்டகாலமாக தமிழக சட்டப்பேரவை பின்பற்றி வந்த சட்டரீதியான நடைமுறைகள், மரபுகள் அதிமுக ஆட்சியினரால் உதாசீனப்படுத்துகிற போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஆண்டுதோறும் சமர்ப்பிக்கப்படுகிற நிதிநிலை அறிக்கையின் அடிப்படையில் பொது விவாதங்களும், மானிய கோரிக்கைகள் மீதான வாக்கெடுப்பும் அவையில் நடைபெற வேண்டுமென சட்டமன்ற விதி கூறுகிறது. அதன்படி 15 ஆவது தமிழக சட்டப் பேரவையின் இரண்டாவது கூட்டத் தொடர் தமிழக அரசால் இறுதி செய்யப்பட்டது அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயலாகும்.

நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தை நடத்திவிட்டு, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்குப் பிறகு மானிய கோரிக்கைகளுக்கான விவாதமும், ஒப்புதலும் வைத்துக் கொள்ளலாம் என அலுவல் ஆய்வுக் குழுவில் முடிவு செய்யப்பட்டது.

ஆனால் அந்த முடிவுக்கு எதிராக அதிமுக அரசு சட்டப்பேரவை கூட்டத் தொடரை கூட்டுவதற்குப் பதிலாக ஆளுநருக்கு எழுதப்பட்ட கடிதத்தின் மூலமாக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவு சட்டமன்ற விதிகளுக்கு எதிரானதாகவும், அலுவல் ஆய்வுக் குழு முடிவை புறக்கணிக்கிற வகையிலும் இருப்பதை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது கண்டனத்திற்குரியது.

தற்போது சட்டப்பேரவை கூட்டத் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பல்வேறு துறைகள் முன் வைத்த மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தவும், கருத்து கூறவும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட உரிமையை அதிமுக அரசு பறித்திருக்கிறது. இதன்மூலம் தமிழக சட்டப்பேரவயின் மாண்பும், மரபுகளும் மதிக்கப்படாமல் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மானிய கோரிக்கைகள் விவாதித்து நிறைவேற்ற தமிழக சட்டப்பேரவையை கூட்ட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி, குடிதண்ணீர் தட்டுப்பாடு, காலி குடங்களுடன் தாய்மார்களின் போராட்டம், விவசாயிகளின் தற்கொலை, விவசாயிகளின் போராட்டம், மின் தட்டுப்பாடு, போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம், புதிய மதுக்கடைகள் திறப்பதை எதிர்த்து தாய்மார்களின் போராட்டம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில்லாத நிலை, தொழிற்சாலைகள் பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்கிற போக்கு போன்ற ஏராளமான பிரச்சினைகள் உருவாகியுள்ளன. இதுகுறித்து விவாதித்து தீர்வு காண தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும்.

எனவே, மானிய கோரிக்கைகளை விவாதித்து நிறைவேற்ற தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்டுவதற்கு முதல்வரும், பேரவைத் தலைவரும் முன்வர வேண்டும்'' என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x