Published : 23 Feb 2023 07:17 PM
Last Updated : 23 Feb 2023 07:17 PM

“என்னை திட்டமிட்டு புறக்கணிக்கிறார்கள்” - மதுரை மாநகராட்சி கூட்டத்தில் துணை மேயர் குற்றச்சாட்டால் பரபரப்பு

மதுரை மாநகராட்சிக் கூட்டம்

மதுரை: நிர்வாகத்தில் என்னை திட்டமிட்டு புறக்கணிகிறார்கள் என்று மதுரை துணை மேயர் நாகராஜன் குற்றம் சுமத்தியுள்ளார். மதுரை மாநகராட்சி கூட்டம் இன்று மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங், துணை மேயர் தி.நாகராஜன் முன்னிலை வகித்தனர். மேயர் இந்திராணி கூட்டம் தொடங்கியதும் பேசியது: ”மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்று ஓராண்டு நிறைவுற்றுள்ளது. கவுன்சிலர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் அனைவர் கூட்டு முயற்சியுடன் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும்.

பாதாள சாக்கடை, மின்விளக்கு, ரோடு வசதி உள்ளிட்ட பணிகளை சிறப்பாக செயல்பட போதிய பணியாளர்கள், வாகனங்கள் தேவைப்படுகிறது. இதை நாம் பூர்த்தி செய்வதற்கு மாநகராட்சி வருவாயை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. வரியை வசூல் செய்வதற்கு மண்டலம் வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வார்டு வாரியாக அதிக வரி பாக்கி உள்ள முதல் 100 பேரிடம் வரி வசூல் செய்யும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வரிவசூல் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

தற்போது இந்த நடவடிக்கை நல்ல பலன் தந்துள்ளது. கடைசி 20 நாட்களில் மட்டும் தினமும் தலா ரூ.2 கோடி வசூலானது. அதிகபட்சமாக கடைசி நாளில் ரூ.5 கோடி வசூலானது. முல்லைப்பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் இந்தாண்டு டிசம்பருக்குள் நிறைவு பெறும். அதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த மறைந்த பாடகர் டி.எம்.சவுந்திரராஜன் நுாற்றாண்டு விழா கொண்டாடப்படவுள்ளது. அவரை கவுரப்படுத்தும் வகையில் தெற்குவெளி வீதி தவிட்டுச்சந்தை பந்தடி 7வது தெரு சந்திப்பில் மார்பளவு சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

அதன்பின் நடந்த விவாதம்: எதிர்கட்சி தலைவர் சோலை ராஜா பேசுகையில், ‘‘ஒவ்வொரு முறையும் சொல்லி சலித்துப்போய்விட்டது. கூட்டத் தீர்மானம் முன்கூட்டியே கவுன்சிலர்களுக்கு வழங்குவதில்லை. கவுன்சிலர்கள் வலியுறுத்தும் கோரிக்கைகள் இதுவரை நடக்கவில்லை. பொது நிதியில் 100 வார்டுகளிலும் என்ன பணிகள் நடந்துள்ளன
என வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மாநகராட்சியில் ஓராண்டு செயல்பாட்டில் திருப்தியில்லை’’ என்றார். பாஜக கவுன்சிலர் பூமா, வழக்கம்போல் மாநகராட்சியை கலைக்க வேண்டும் என்று கோஷமிட்டு வெளிநடப்பு செய்தார்.

துணை மேயர் நாகராஜன் பேசுகையில், ‘‘அலுவலக நிகழ்ச்சிகளுக்கு, கூட்டங்களுக்கு என்னை முறையாக அதிகாரிகள் அழைப்பதில்லை. என்னுடைய கருத்துகளை தெரிந்து கொள்வதற்கு மாநரகாட்சி ஆணையாளர், பொறியாளருக்கு கடிதம் அனுப்பினால் அதற்கான பதிலும் அவர்கள் வழங்குவதில்லை.

மாநகராட்சி வருவாயை அதிகரிக்க முயற்சி செய்வதாக கூறுகிறார்கள். மத்திய, மாநில அரசு நிறுவன கட்டிடங்களில் வரிவசூல் செய்வதற்கு அதிகாரிகள் முயற்சியே செய்வதில்லை. அதுபோல், பல பெரிய நிறுவனங்கள் ட்ரஸ்ட் என்ற பெயரில் மாநகராட்சிக்கு வரி செலுத்துவதில்லை. பலர் மாநகராட்சிக்கு வரி கட்டாமால் இருக்க நீதிமன்றத்தில் தடையாணை பெற்றுள்ளனர். அந்த தடையை உடைத்து வரிவசூலிக்க மாநகராட்சி வழக்கறிஞர்கள் குழுவும், அவர்களுக்கு உத்தரவிட மாநகராட்சி நிர்வாகமும் தயாரில்லை. ‘ஆடிட்’ அப்ஜெஷனில் மட்டும் ரூ.3,692 கோடி பெண்டிங் உள்ளது.

பெரிய பெரிய நிறுவனங்கள் கட்டிடங்களை மாநகராட்சி வருவாய்துறை அதிகாரிகள் சரியாக அளந்து வரிவிதிப்பு செய்வதில்லை. கட்டிடங்களுக்கான வரிவிதிப்பு வெளிப்படை தன்மையாக இருக்க வேண்டும்.

துனை மேயர் நாகராஜன்

இப்படியே போனால் மாநகராட்சி நிர்வாகம் மோசமாக போய்விடும். கல்வெட்டில் மேயர், ஆணையாளர் பெயர் போடுகிறார்கள். ஆனால், என்னுடைய பெயரை திட்டமிட்டு புறக்கணிக்கிறார்கள். இந்த விஷயம் யதார்த்தமாக நடந்த விஷயமாக தெரியவில்லை. ஒரு வாரத்திற்கு முன்பே மாநகராட்சியில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்களை கொடுக்க வேண்டும். அந்த தீர்மானத்தை பற்றியே கவுன்சிலர்கள் கூட்டங்களில் விவாதிக்க வேண்டும். ஏனென்றால் வார்டு பிரச்சனைகளை மண்டல கூட்டங்களிலே விவாதித்துவிடுவார்கள். ஆனால், இன்று நடக்கிற மாநகராட்சி கூட்டத்திற்கு தீர்மானம் விவரம் எனக்கே இன்று காலைதான் வந்தது’’ என்றார்.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த துணை மேயரே, மேயருக்கும், திமுக மாநகராட்சி நிர்வாகத்திற்கும் எதிராக பகீரங்கமாக போர்க்கொடி உயர்த்தியுள்ள இந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x