அதிமுக பொதுக்குழு தீர்ப்பு முதல் ரஷ்யாவின் ‘அதிரடி’ வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ பிப்.23, 2023

அதிமுக பொதுக்குழு தீர்ப்பு முதல் ரஷ்யாவின் ‘அதிரடி’ வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ பிப்.23, 2023
Updated on
3 min read

அதிமுக பொதுக்குழு செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: கடந்த ஆண்டு ஜூலை 11-ம் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சையால் அதிமுகவினர் ஓபிஎஸ், பழனிசாமி தலைமையில் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தரப்பு அதிமுக பொதுக்குழுவை கூட்டியது. அதில் பழனிசாமி, கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில், அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தீர்மானங்கள் மீது உத்தரவு பிறப்பிக்கவில்லை: உச்ச நீதிமன்றம்: அதிமுக பொதுக்குழு வழக்கில், உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், "ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு நடத்தப்பட்ட வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டது. உரிய சட்டவிதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டனவா என்பது குறித்தும் ஆராயப்பட்டன. அதன் அடிப்படையில்,அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கிய தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது. கடந்தாண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும்.

மேலும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக எந்தக் கோரிக்கையும் எங்கள் முன்பு வைக்கப்படவில்லை. எனவே, தீர்மானங்கள் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப் போவதில்லை. எதிர்காலத்தில் இது தொடர்பாக வழக்கோ அல்லது தேர்தல் ஆணையத்தில் முறையீடு யாரேனும் தாக்கல் செய்தால் அப்போது அதன் மீதான நடவடிக்கைகள் சட்டப்படி தொடரும்" என்று தெரிவித்திருந்தது.

“மூச்சு உள்ளவரை உங்களில் ஒருவனாக பணியாற்றுவேன்” - இபிஎஸ்: அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு, நியாயத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "வரலாற்று சிறப்பு மிக்க உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு நியாயத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களின் நல்லாசியுடனும், ஒன்றரை கோடி தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவுடனும், கட்சியை வழிநடத்தவும், ஜெயலலிதா கண்ட நூறாண்டு சரித்திரக் கனவை நனவாக்கவும் உயிர் மூச்சு உள்ளவரை உங்களில் ஒருவனாக பணியாற்றுவேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்: ஓபிஎஸ் தரப்பு: அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் கூறுகையில், "பொதுக் குழு செல்லும் என்று தான் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தீர்மானங்கள் செல்லும் என்று கூறவில்லை. நாங்கள் தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். இது எங்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை. முழு தீர்ப்பை பார்த்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

பாலாபிஷேகம் செய்து கொண்டாடிய இபிஎஸ் ஆதரவாளர்கள்: அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி உருவப் படத்திற்கு அதிமுக தொண்டர்கள் பாலாபிஷேகம் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் திரண்டிருந் தொண்டர்கள் காலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான நிலையில், இபிஎஸ் உருவப் படத்திற்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அணு ஆயுத ஒப்பந்தம்: ரஷ்யாவின் விலகலால் பரபரப்பு: அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாஸ்கோவில் அவர் பேசும்போது, “உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவும், ஐரோப்ப நாடுகளும் ஒத்துழைப்பு அளிக்க மறுத்து வருகின்றன. இந்தச் சூழலில் நாங்கள் போதும் இந்தப் போரை கைவிட மாட்டோம். அணு ஆயுதக் கையிருப்பை கட்டுக்குள் வைத்திருக்க அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து (நியூ ஸ்டார்ட் ஒப்பந்தம்) ரஷ்யா விலகுகிறது. நமது அணு ஆயுத பலத்தைப் பறிக்க ஐரோப்பா நாடுகள் திட்டமிட்டுள்ளன. இனி அமெரிக்கா அணு ஆயுத சோதனை மேற்கொண்டால் நாங்களும் அணு ஆயுத சோதனை நடத்துவோம்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், புதினின் முடிவு குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசும்போது, ”அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகி ரஷ்யா மிகப் பெரிய தவற்றை செய்துவிட்டது. இது பொறுப்பான செயல் அல்ல. எனினும் புதின் அணு ஆயுதங்களை பயன்படுத்த மாட்டார் என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸில் இருந்து ராஜாஜியின் கொள்ளுப் பேரன் விலகல்: இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜியின் கொள்ளுப் பேரன் சி.ஆர்.கேசவன், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்தார். இது தொடர்பாக அவர் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், “கடந்த 20 ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றுவதில் எந்தவித மதிப்புமிகு அடையாளத்தையும் நான் உணரவில்லை. அதனால், இனியும் என்னால் கட்சியுடன் இணைந்து செயல்பட முடியாது என்று தோன்றுகிறது. இப்போது கட்சி இருக்கும் நிலைமை ஏற்றுக் கொள்வதற்கு இல்லை. அதனாலேயே தான் நான் தேசிய அளவில் எந்தப் பொறுப்பையும் சமீபமாக ஏற்கவில்லை. அதேபோல் இந்திய ஒற்றுமை யாத்திரையிலும் பங்கேற்கவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

காங். மூத்த தலைவர் பவன் கேராவுக்கு இடைக்கால ஜாமீன்: காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவை டெல்லி விமான நிலையத்தில் வைத்து அசாம் போலீசாரால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, காங்கிரஸ் கட்சி தொடர்ந்த வழக்கில், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய பவன் கேரா, பிரதமர் மோடியை அவமத்தித்ததாக கூறப்பட்ட புகாரில் அசாம் போலீசார் வியாழக்கிழமை கேராவை கைது செய்தனர். டெல்லியிலிருந்து சத்தீஸ்கரின் ராய்பூருக்கு இண்டிகோ விமானத்தில் செல்ல இருந்த அவரை தடுத்து நிறுத்தி, விமானத்திலிருந்து இறக்கிய போலீஸார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

உலகக் கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும்: கவாஸ்கர்: எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சல்மான் ருஷ்டி குறித்த ஈரான் அறக்கட்டளை அறிவிப்பால் சர்ச்சை: பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை தாக்கிய இளைஞருக்கு நிலம் நன்கொடையாக வழங்கப்படும் என்று ஈரானைச் சேர்ந்த அறக்கட்டளை அமைப்பு தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in