

சென்னை: "தேர்தல் விதிமீறல்களை தடுக்காமல் பறக்கும் படையினரும், தேர்தல் அதிகாரிகளும் வேடிக்கைப் பார்த்து வருகின்றனர். நடுநிலையோடு செயல்பட வேண்டிய தேர்தல் அதிகாரிகள், ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவது எந்த வகையில் நியாயம்?" என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பல்வேறு விதமீறல்கள் நடைபெற்று வருகின்றன. ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் போட்டி போட்டிக்கொண்டு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பல்வேறு இலவச பொருட்களை வழங்கி வருகின்றனர்.
கும்பல் கும்பலாக மக்களை பட்டறையில் அடைத்து வைப்பது, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை செய்தி சேகரித்த பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது, பணப்பட்டுவாடா குறித்து கருத்து தெரிவிக்கும் மாற்று கட்சியினர் மீது ரவுடி கும்பலை வைத்து தாக்குதல் நடத்துவது போன்ற பல்வேறு அராஜக செயல்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்று வருகின்றன.
தேர்தல் விதிமீறல்களை தடுக்காமல் பறக்கும் படையினரும், தேர்தல் அதிகாரிகளும் வேடிக்கை பார்த்து வருகின்றனர். நடுநிலையோடு செயல்பட வேண்டிய தேர்தல் அதிகாரிகள் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவது எந்த வகையில் நியாயம்.
பணப்பட்டுவாடா செய்வது தொடர்பாக வீடியோ, ஆதாரத்துடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தேமுதிக மனு அளித்துள்ளது. அதேபோல் மேலும் பல்வேறு கட்சிகளும் புகார் அலித்திருக்கும் நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் தேர்தல் விதிமீறல்களை தடுக்க அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுபோன்ற சம்பவங்களை பார்க்கும்போது பணநாயகமே ஜனநாயகமாகிவிட்டதோ என்று தோன்றுகிறது. பணத்தை பிரதானப்படுத்தி மக்களை சந்திப்பது சரிதானா? ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த முடியவில்லை என்றால் இங்கு தேர்தல் எதற்கு? தேர்தல் அதிகாரிகள் எதற்கு? நேரடியாக ஆளுங்கட்சியோ வென்று விட்டதாக அறிவிக்க வேண்டியது தானே. இங்கு நியாயமான முறையில் பிரச்சாரம் செய்யும் கட்சிகளின் நிலை என்ன?
இனியாவது ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் பெறுவதை மக்களும் தவிர்க்க வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.