Published : 23 Feb 2023 06:51 PM
Last Updated : 23 Feb 2023 06:51 PM

“இரவில் தூக்கமே இல்லை... நான் வேண்டியபடி நல்ல தீர்ப்பு” - மனநிலையை விவரித்த இபிஎஸ்

மதுரை: ''எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இல்லத் திருமண விழாவில் இடைக்கால அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

எம்ஜிஆர் 106-வது பிறந்த நாள், ஜெயலலிதா 75-வது பிறந்த நாள் மற்றும் 51-வது ஆண்டு அதிமுக பொன்விழாவை முன்னிட்டு ஜெ. பேரவை சார்பில் மதுரை மாவட்டம் திருமங்கலம் டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோயில் திடலல் 51 ஏழை ஜோடிகளுக்கு சமத்துவ சமுதாய திருமண விழா இன்று நடந்தது. இந்த நிகழ்வில் ஆர்.பி.உதயக்குமார் மகளுக்கும் திருமணம் நடந்தது.

இந்நிகழ்வில் ஜெ.பேரவை மாநில செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, அமைப்பு செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா மற்றும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பிக்கள், எம்எல்ஏ-க்கள், முன்னாள் எம்எல்ஏ க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் கே.பழனிச்சாமி திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்து 51 ஜோடிகளுக்கும் ஒரே மேடையில் திருமணம் நடத்தி வைத்தார்.

இந்த விழாவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் கே.பழனிசாமி பேசியது: “திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயியக்கப்படுவதாக சொல்வார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் திருமண நாள் பொன்னான நாள். அந்த திருமண நாள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். இந்த நன்நாளில் திருமணம் செய்த 51 ஜோடிகளும் தங்கள் இல்லரத்தை தொடங்க இருக்கிறார்கள். அவர்களுக்கு இறைவன் அருள்புரிய வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நான் நேற்று முதல் கலங்கிப் போய் இருந்தேன். உதயகுமார் ஏற்பாட்டில் 51 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கிற பாக்கியத்தை இறைவன் கொடுத்து இருக்கிறார்.

இருந்தாலும் நேற்று இரவு உச்ச நீதிமன்றத்தில் திடீரென்று இன்று காலை தீர்ப்பு வருவதாக சொன்னார்கள். மனதிலே ஒரு அச்சம் ஏற்பட்டது. எப்படி இந்த தீர்ப்பு அமையும், என்னவாக இருக்கும் என்று எண்ணி எண்ணி, இரவு முழுவதும் எனக்கு தூக்கமே வரவில்லை. பல பேர் என்னிடத்தில் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசினார்கள். 51 குழந்தைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கிறோம். இந்த சமயத்தில் ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்தால் இன்னும் பெரும் மகிழ்ச்சி அடையலாம் என்று நினைத்தேன். ஆனால், தீர்ப்பு எப்படியாக இருக்கும் என்ற அச்சத்திலே இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தேன். அதனால், என்னுடைய உதட்டில் மட்டுமே சிரிப்பு இருந்தது. உள்ளத்திலே சிரிப்பு இல்லவே இல்லை.

ஆர்.பி.உதயகுமார் இங்கு ஜெயலலிதாவுக்கு கோயில் எழுப்பியிருக்கிறார். அந்த கோவிலிலே இந்த இயக்கத்தை தொடங்கி வைத்த எம்ஜிஆர் சிலையும் அமைத்து இருந்தார். அவர் என்னிடத்திலே நிகழ்ச்சிக்கு வருவதற்காக காரில் ஏறியவுடன், வளாகத்தில் உள்ள ஜெயலலிதா கோவிலுக்கு சென்று எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பிறகு திருமண மேடைக்கு செல்லலாம் என்றார். என்னோட வந்த செல்லூர் கே.ராஜூ, ராஜன் செல்லப்பாவும் அங்கு செல்லாம் என்றார்கள். அவர்கள் வேண்டுகோளை ஏற்று எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்தேன். அப்போது உங்கள் இருவர் ஆசியுடன் நடக்கும் 51 குழந்தைகளுக்கு திருமண நடக்கிறது. இந்த நாளில் நல்ல தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். நான் நினைத்தப்படியே சில நிமிடங்களிலே அதிமுகவுக்கு நல்ல தீர்ப்பு வந்தது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தெய்வ பக்தி மிகுந்தவர்கள். அதனால், இந்த தீர்ப்பு தெய்வ சக்தி கொண்ட தலைவர்கள் கொடுத்த வரப்பிரசாதம்.



எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது திமுக ஒரு தீய சக்தி, அதை அழிக்கவே அதிமுகவை தொடங்கியதாக தெரிவித்தார். தனது இறுதி மூச்சி வரைக்கும் திமுகவை எதிர்த்து போராடி வெற்றிக் கொண்டவர். அதே வழியில் வந்த ஜெயலலிதாவும் எவ்வளவோ சோதனைகளை சகித்துகொண்டு திமுகவை எதிர்த்து போராடினார். ஜெயலலிதா எனக்கு பின்னாலும் 100 ஆண்டு காலம் அதிமுக தொடரும் என்று அறிவித்தார். அது இன்று சாத்தியமாகி இருக்கிறது. சில எட்டப்பவர்கள் அதிமுகவை ஒழிக்க முடக்க நினைத்தனர். திமுகவிற்கு 'பி' டீமாக இருந்து செயல்பட்டனர். அவர்கள் முகத்திரை இன்று கிழிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 6, 7 மாத காலமாக அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பட்ட வேதனை, எண்ணிலடங்காதவை. எதிர்கட்சியினர் அதிமுக காலியாகப்போகிறது, எதிர்காலமே இல்லை என்று கூறினர். ஒட்டுமொத்தமாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு அந்த வெற்றுப் பேச்சுகளுக்கு முடிவுகட்டிவிட்டது. தடைகள் அனைத்தும் தகர்த்தெறியப்பட்டுள்ளது.

அதிமுக கட்சி, தொண்டர்கள் தலைமையில் இயங்குகிற கட்சி. தமிழகத்தில் அதிமுக 33 ஆண்டுகள் ஆட்சி செய்த பிரதான கட்சி. இந்த இயக்கம் மக்களுக்காக உழைக்கிற இயக்கம். திமுகவை போல் குடும்பத்திற்காக உழைக்கிற இயக்கம் இல்லை. இன்று திருமணம் செய்த 51 ஜோடிகளும் ராசியானவர்கள். அதிமுக பொதுக்குழுவுக்கு அங்கீகாரம் கிடைத்த நாள் அவர்கள் திருமண நாள். தமிழகத்திலே வலிமையான கட்சியாகவும், அதிகமான தொண்டர்கள் உள்ள கட்சியாகவும் அதிமுக திகழ்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஏழை வாக்காளர்களை ஆடு, மாடுகள் போல் அழைத்து சென்று கொட்டகையில் அடைத்து வைக்கிறார்கள். மத்திய தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையம் மற்றும் ஆட்சியரிடம் புகார் கொடுக்கப்பட்டது. அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

இடைத்தேர்தலில் திருமங்கலம் ஃபார்முலாவை உருவாக்கினார்கள். தற்போது ஈரோட்டில் தேர்தல் விதிமுறைக்கு புறம்பாக வாக்காளர்களை அடைத்து வைப்பது ஜனநாயக படுகொலை. அந்த செயலை திமுக செய்து கொண்டிருக்கிறது. வாக்காளர்கள் மீது திமுகவிற்கு நம்பிக்கை இல்லை. அதனாலே அவர்கள் அடைத்து வைக்கிறார்கள். அவர்கள் எங்கு சென்றாலும் உறுதியாக அதிமுகவிற்குதான் வாக்களிப்பார்கள். வாக்காளர்களை நம்புகிறோம். அவர்கள்தான் நீதிபதிகள். அவர்கள் அளிக்கிற தீர்ப்புதான் இந்த ஆட்சிக்கு நல்ல பெயர் கிடைக்குமா? கெட்ட பெயர் கிடைக்குமா? என்பது தெரியும். நிச்சயமாக அவர்கள் அளிக்கிற தீர்ப்பு இந்த ஆட்சிக்கு கெட்ட பெயர்தான் கிடைக்கும்” என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x