

அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் முதல்வர் கே.பழனிசாமி நேற்று திடீரென ஆலோசனை நடத்தினார்.
சட்டப்பேரவையை கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. போக்குவரத்து ஊழியர்களுக்கு உறுதியளித்தபடி நிவாரணம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன போன்ற சிக்கல்கள் அதிமுக அரசுக்கு ஏற்பட்டுள்ளன. இதற்கிடையே, சில எம்எல்ஏக்கள் ரகசிய கூட்டம் நடத்தி வருவதாலும் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்த முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் திடீரென ஆலோசனை நடத்தினார். இதில் சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், ஆர்.காமராஜ், கே.சி.வீரமணி, நிலோபர் கபீல், ராஜலட்சுமி, எம்.பி. வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிப்பதற்காக அடுத்தகட்டமாக கட்சி நிர்வாகிகளிடம் பிரமாணப் பத்திரங்களை பெறுவது, ரகசிய கூட்டம் நடத்தும் எம்எல்ஏக்களை சமாளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை தொடர்பாக ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. கூறும்போது, ‘‘இரு அணிகளும் விரைவில் இணையும் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போது பிரமாணப் பத்திரங்களை பெறுவது தொடர்பாக பேசினோம்’’ என்றார்.
இது தொடர்பாக அதிமுக நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘கடந்த 3 வாரங்களாக அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியினரிடம் இருந்து அமைச்சர்கள் மனுக்களை பெற்று வருகின்றனர். தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சியினர் மனுக்களை வழங்குகின்றனர். இதில் அரசு உதவி, இடமாற்றம் தொடர்பாகவும், கட்சியில் பதவி, புகார்கள் தொடர்பாகவும் பல்வேறு மனுக்கள் வருகின்றன. இவற்றை பரிசீலித்து தேவையான உதவிகளை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.