

சென்னை: ஜெயலலிதா கோயிலில் வழிபட்டவுடன் அற்புதமான செய்தி வந்ததாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மதுரை அருகே டி.குன்னத்தூரில் ஒரே மேடையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மகள் உள்பட 51 ஜோடிகளுக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் கே.பழனிசாமி சமத்துவ சமுதாய திருமணத்தை நடத்தி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "திருமண நாள் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் பொன்னான நாள். உங்களின் இல்லற வாழ்க்கை ஏற்றம் பெற வாழ்த்துகிறேன். நான் நேற்றிலிருந்து கலங்கிப் போய் இருந்தேன். இன்று தீர்ப்பு வருகிறது என்று நேற்று இரவு செய்தி கிடைத்தது. இதனால் மனதில் அச்சம் ஏற்பட்டது. இதன் காரணமாக இரவில் தூக்கம் வரவில்லை. உதட்டில் தான் சிரிப்பு இருந்தது. உள்ளத்தில் இல்லை.
காலை ஜெயலலிதா கோயிலுக்கு சென்று ஜெயலலிதா சிலை மற்றும் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த போது நல்ல தீர்ப்பு வேண்டும் என்று கேட்டேன். அங்கு இரு பெரும் தலைவர்களும் அருள் கொடுத்தார்கள். அடுத்து சில நிமிடங்களிலேயே அற்புதமான செய்தி வந்தது. நம்முடைய தலைவர்கள் தெய்வ சக்தி மிக்க தலைவர்கள்.
அதிமுகவை அழிக்க நினைக்கும் சில எட்டப்பர்கள், திமுகவின் B டீமாக உள்ளவர்களின் முகத்திரைகள் இன்று கிழிக்கப்பட்டுள்ளது. இனி அதிமுக ஒரே அணி தான். அதிமுக குடும்ப கட்சி கிடையாது. மக்களுக்காக உழைக்கும் கட்சி." இவ்வாறு அவர் பேசினார்.