

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்து குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று ஸ்டாலினை சந்தித்த அவர், இதனை வலியுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை மத்திய அரசு அமைக்கவில்லை. கர்நாடகம், ஆந்திரம், கேரளம் போன்ற அண்டை மாநிலங்கள் தமிழகத் துக்கு கிடைக்க வேண்டிய தண் ணீரை தடுக்கும் வகையில் தடுப் பணைகளை கட்டி வருகின்றன. இதனைத் தடுக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வறட்சி நிவாரணம், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெறப்பட்ட விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விரைவில் நடைபெற வுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலை தமிழகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் புறக் கணிக்க வேண்டும். இதற்காக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்க இருக்கிறோம். முதல் கட்டமாக நேற்று திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து இதனை வலியுறுத்தினோம்.