

சென்னை: ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி எதிரே மாநகராட்சி அலட்சியத்தால் வாலாஜா சாலையில் தொடர்ந்து சிறுநீர் கழித்தும், கழிவுகளை கொட்டியும் அசுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகரின் மையப் பகுதியாக வாலாஜா சாலை திகழ்கிறது.
இது மாநகராட்சியின் ராயபுரம் மண்டலம், 59-வது வார்டில் வருகிறது. இந்த சாலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி எதிரே, மாநகராட்சி அலட்சியத்தால், அறிவிக்கப்படாத சிறுநீர் கழிப்பிடமாகவும், குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டும் இடமாகவும் மாறி அசுத்தத்தின் பிடியில் சிக்கி உள்ளது.
இது தொடர்பாக ‘இந்து தமிழ் திசை' நாளிதழில் புகைப்படத்துடன் இரு முறை செய்தி வெளியிட்டும், அன்றைய தினம் மட்டும் அங்குள்ள குப்பைகளை அகற்றிவிட்டு, பிளீச்சிங் பவுடரை தூவுகின்றனர். அடுத்த சில தினங்களில் வழக்கம்போல சிறுநீர் கழிப்பிடமாகவும், குப்பை கொட்டும் இடமாகவும் மாறிவிடுகிறது.
நேற்றும் அப்பகுதியில் சிறுநீர் கழித்தும், கட்டுமானக் கழிவுகளை கொட்டியும் அசுத்தப்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் அவ்வழியாக செல்லும் ஏராளமான பொதுமக்கள் துர்நாற்றத்தால் அவதிக்குள்ளாகினர்.
இதுபோன்ற மாநகரப் பகுதிகளில் குப்பை மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டுதை தடுக்க சிசிடிவி கேமராக்களை நிறுவி, விதிமீறலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு வழக்குகளில் தேசிய பசுமை தீர்ப்பாயம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இருப்பினும் அதை மாநகராட்சி நிர்வாகம் நடைமுறைப்படுத்தாததால் மாநகரின் மையப்பகுதி அசுத்தமாகவே இருந்து வருகிறது.