

சென்னை: சென்னை, புறநகர் பகுதிகளில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த காய்ச்சலுக்கு தனியார் மருத்துவர்கள் அதிக பரிசோதனைகளை எழுதி கொடுப்பதால், பல ஆயிரம் ரூபாய்செலவிடும் நிலை இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் கடந்த ஒரு மாதமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சல் வீட்டில் ஒருவருக்கு வந்தால் அடுத்த சில தினங்களில் மற்றவர்களுக்கும் பரவி விடுகிறது. வழக்கமாக காய்ச்சல் ஏற்பட்டால் 3 நாட்களில் சரியாகிவிடும். ஆனால் இந்த காய்ச்சல், சளி, இருமலுடன் சேர்ந்து 5 நாட்களுக்கு மேல் நீடிக்கிறது.
காய்ச்சல் குணமடைந்துவிட்டாலும், சளி, இருமல் சுமார் 10 நாட்களுக்கு நீடிக்கிறது. பலருக்கு 10 நாட்களுக்கு மேல் சோர்வும் நீடிக்கிறது. பொதுவாக குழந்தைகளுக்கு இந்த பாதிப்புகள் அதிகமாக உள்ளது. பல குழந்தைகள் ஒரு வாரத்துக்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை எடுக்கும் நிலை இருந்து வருகிறது.
பெரும்பாலும் இந்த காய்ச்சல் மாலை நேரங்களில் அதிகரிப்பதால், தனியார் மருத்துவ ஆலோசனைக்கு பொதுமக்கள் செல்கின்றனர். அங்கு முதலில் வழக்கம் போல பாராசிட்டமால், அமாக்சிலின் அல்லது அசித்ரோமைசின் மருந்துகளை கொடுக்கின்றனர்.
3 நாட்களுக்கு மேல் காய்ச்சல், சளி நீடித்தால் பின்னர் மேற்கூறிய மருந்துகளுடன் சிட்ரிசைன், அஸ்கார்பிக் ஆசிட் போன்றவற்றையும் சேர்த்து மருந்தை தொடர சொல்கின்றனர். அதன் பிறகும் சளி, இருமல், சோர்வு நீடிக்கும் நிலையில், ரத்த வெள்ளை அணு, சிவப்பணு, கல்லீரல் செயல்பாடு பரிசோதனை, டெங்கு, ஃபுளூ காய்ச்சல், மார்பக எக்ஸ்ரே போன்ற 10-க்கும் மேற்பட்ட பரிசோதனைகளை செய்யுமாறு எழுதிக் கொடுக்கின்றனர்.
இந்த பரிசோதனைகளை தனியார் மருத்துவமனைகளில் செய்ய சுமார் ரூ.8 ஆயிரத்து 500 முதல் அதிகபட்சமாக ரூ.12 ஆயிரம் வரை ஆவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். சிலர் தங்கள் குழந்தைகள் மீது வைத்திருக்கும் அளவு கடந்த பாசத்தால், அரசு மருத்துவமனைகளுக்கு சென்று நேரத்தை செலவிட பொறுமை இல்லாமல், தங்கள் பொருளாதார நிலையை பொருட்படுத்தாது, அதிக பணத்தை செலவிட்டு பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், இந்த காய்ச்சலால் குறிப்பிடும்படியாக உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை. இலவச சிகிச்சை இது தொடர்பாக மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, தற்போது அதிகாலை நேரங்களில் பனி மூட்டம் நிலவுவதாலும், குளிர் அதிகரித்திருப்பதாலும் வைரஸ் காய்ச்சல்கள் அதிகமாக பரவுகின்றன. இது அச்சப்படக்கூடிய காய்ச்சல் இல்லை.
குணமாக சில தினங்கள் தாமதமாகும். மாநகராட்சி சார்பில் 140 க்கும் மேற்பட்ட நகர்ப்புற சுகாதார நிலையங்கள், சமுதாய நல மையங்கள், தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனை ஆகியவற்றில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். கூட்டமாக செல்லும்போது முகக் கவசம் அணிதல், அவ்வப்போது கையை முறையாக கழுவுவதன் மூலம் வைரஸ் காய்ச்சல் பரவலில் இருந்து தப்பிக்கலாம்" என்றனர்.