Published : 11 May 2017 02:51 PM
Last Updated : 11 May 2017 02:51 PM

பிரிவினைவாதத்தை தூண்டும் நிகழ்ச்சிகளுக்கு ஊக்கம் அளிக்கக் கூடாது: வாசன்

பிரிவினைவாதத்தை தூண்டும் நிகழ்ச்சிகளுக்கும், விழாவிற்கும் எந்த நாடும் எந்தக் காரணத்திற்காகவும் ஊக்கம் அளிக்கக் கூடாது என்பதில் இந்தியா கவனத்துடன் இருக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்தியா மிகப் பெரிய கலாச்சாரமிக்க நாடு. இங்கு வாழும் பல்வேறு இனத்தைச் சார்ந்த, பல்வேறு மொழி பேசும் மக்கள் நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பட்டிற்கும் பெரும் பங்காற்றி வருகிறார்கள். இந்தியாவில் சுமார் 20 மில்லியன் சீக்கியர்கள் உள்ளனர். இந்திய மக்கள் தொகையில் சுமார் 2 சதவீதம் சீக்கியர்கள் இருக்கிறார்கள். இதில் 75 சதவீதம் பேர் பஞ்சாபில் வாழ்கின்றனர். இவர்கள் நம் நாட்டின் தேசப்பற்றிற்கும், தேச ஒற்றுமைக்கும் ஆற்றி வருகின்ற பங்கு மகத்தானது.

குறிப்பாக நம் நாட்டின் பாதுகாப்பில் ராணுவத்துறையில் சீக்கியர்களின் பணி மிகவும் போற்றுதலுக்குரியது. மேலும் இந்தியா பெற்ற விடுதலைக்கும், நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும், மத நல்லிணக்கத்திற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் சீக்கிய இனத்தின் பங்களிப்பு இன்றியமையாதது. இப்பேற்பட்ட புகழுக்கும் பெருமைக்கும் உரிய சீக்கியர்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் வாழ்கிறார்கள்.

இச்சூழலில் கடந்த ஏப்ரல் மாதம் 30-ம் தேதி கனடாவில் கல்சா தின விழா எடுக்கப்பட்டது. இதில் கனடா நாட்டின் பிரதமரும் கலந்து கொண்டார் என்பது துரதிஷ்டவசமானது. இந்தியாவில் பிரிவினைவாதத்தில் ஈடுபட்டவர்களுக்கு கனடாவில் விழா எடுக்கும் நிகழ்ச்சியில் கனடா பிரதமர் கலந்து கொண்டது இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

பிரிவினைவாதத்தை தூண்டும் நிகழ்ச்சிகளுக்கும், விழாவிற்கும் எந்த நாடும் எந்தக் காரணத்திற்காகவும் ஊக்கம் அளிக்கக் கூடாது என்பதில் இந்தியா கவனத்துடன் இருக்க வேண்டும்.

எனவே பாரதப் பிரதமர் இந்த விஷயத்தில் நேரிடையாக தலையிட்டு, கனடா நாட்டின் பிரதமருடன் தொடர்பு கொண்டு கடந்த ஏப்ரல் 30, 2017 அன்று கனடாவில் நடைபெற்ற கல்சா விழாவில் கலந்து கொண்டதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். இனிமேலும் இது போன்ற நிகழ்ச்சிகளில் கனடா நாட்டின் பிரதமர் கலந்து கொள்வதை தவிர்த்தால்தான் உலக நாடுகளின் ஒற்றுமைக்கு வழி வகுக்கும் என்பதை இந்தியா கனடாவிற்கு வலியுறுத்த வேண்டும்.

சீக்கிய இனம் உலகம் முழுவதும் வாழ்கிறது. அவர்கள் மட்டுமல்ல இந்தியாவைச் சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் வாழ்கிறார்கள். இவர்கள் எந்த நாட்டில் வசித்தாலும், தங்கள் தாய்நாட்டிற்கு எந்தவிதத்திலும் பாதகம் ஏற்படாமல் இருக்கும் வகையில் செயல்படுகிறார்கள்.

இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் வெளி நாடுகளில் வாழ்பவர்கள் பிரிவினைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட முயற்சித்தால் அந்த நாடு அனுமதி அளிக்கக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்க வேண்டும்.

எனவே இந்தியாவின் பாதுகாப்பிற்கும், ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பாகிஸ்தான், கனடா போன்ற நாடுகளுக்கு தகுந்த எச்சரிக்கை விடுப்பதோடு, இது போன்ற செயல்பாடுகளை உலக நாடுகளின் கவனத்திற்கும் கொண்டு செல்ல வேண்டியது மத்திய பாஜக அரசின் கடமை.

மேலும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு அந்நாடு உரிய பாதுகாப்பினை தொடர்ந்து அளிக்க வேண்டும் என்பதை மத்திய அரசு தொடர்ந்து அந்நாடுகளுடன் தொடர்பு கொண்டு உறுதி செய்துகொள்ள வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x