

மயிலாடுதுறை: மயிலாடுதுறைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் உலகத் தாய்மொழி நாள் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. சங்க நிறுவனர் தலைவர் ஜெனிபர் ச.பவுல்ராஜ் தலைமை வகித்தார். சங்கத்தின் சிறப்புத் தலைவர் சு.சிவலிங்கம், மயிலாடுதுறை உலகத் தமிழ்க் கழகத் தலைவர் சிவ.கோ, தமிழ்த் தேசிய முன்னணி நிர்வாகி கு.பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மயிலாடுதுறை திருக்குறள் பேரவைத் தலைவர் சி.சிவசங்கரன், தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவைத் தலைவர் துரை.குணசேகரன் ஆகியோர், தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்ற ஜெனிபர் ச.பவுல் ராஜின் தமிழ்ப் பணிகள் குறித்து பாராட்டிப் பேசினர். பாவலர் கு.ரா எழுதிய ‘சூரியனைத் துயிலெழுப்பு’ என்ற நூலை, மதுரை கவிஞர் ரேவதி அழகர்சாமி வெளியிட, மன்னம்பந்தல் அ.வ.அ.கல்லூரி தமிழாய்வுத் துறை தலைவர் சு.தமிழ்வேலு பெற்றுக் கொண்டு, நூலை பாராட்டிப் பேசினார். பாவலர் கு.ரா ஏற்புரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ‘தமிழ் வாழ்வில் மயிலாடுதுறை’ என்ற தலைப்பில் தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்ற புலவர் செந்தலை ந.கவுதமன் பேசியது: வங்கதேசத்தில் மொழிக்காக போராட்டம் நடத்தி 5 பேர் உயிரிழந்த நாளான பிப்.21-ம் தேதியை உலகத் தாய்மொழி நாளாக அறிவித்திருக்கிறார்கள்.
ஆனால் இந்த தேதிக்கு உரிமை கொண்டாட வேண்டிய மாநிலம் தமிழகம். 1938-ல் ராஜாஜி முதல்வராக இருந்தபோது இந்தியை கட்டாயமாக்கினார். அப்போதே, இந்தி திணிப்பை எதிர்த்து பெரியார் போராட்டம் நடத்தினார். அதன் காரணமாக 1940 பிப்.21-ம் தேதி கட்டாய இந்தி என்ற ஆணை திரும்பப் பெறப்பட்டது.
இந்த நாளுக்கு நம்மைத் தவிர வேறு எவர் உரிமை கோர முடியும்? உலகத் தாய்மொழி நாளுக்கான நிகழாண்டு கருப்பொருள் ‘பன்மொழிக் கல்வி’. மொழியின் பெருமை என்பது நம்முடைய தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில் இருக்கிறது என்றார். முன்னதாக தமிழ்ச்சங்க நிர்வாகி விமலா நாகேஷ் வரவேற்றார். வசுப்பிரமணியன் நன்றி கூறினார்.மயிலாடுதுறையில் நடைபெற்ற உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேசிய புலவர் செந்தலை ந.கவுதமன்.படம்: வீ.தமிழன்பன்