

ஈரோடு: ஓபிஎஸ் அணியின் ஈரோடு மாவட்ட செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவதாக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்தார்.
இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கியபோது, செந்தில் முருகன் என்பவரை வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கே.எஸ்.தென்னரசு அதிமுக வேட்பாளராக தேர்வு பெற்று அவருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் தனது ஆதரவு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவார் என்று ஓ.பன்னீர்செல்வம் திடீரென அறிவித்தார். ஆனால் வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கு முன்பே, பரிசீலனையின்போதே அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
முதலில் இரட்டை இலைக்காக போராடிவிட்டு, பின்னர் திடீரென வேட்பாளரை வாபஸ் பெறச் சொன்னதால், மாநகர் மாவட்டச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ் மீது அதிருப்தியடைந்தனர்.
இந்நிலையில், ஓபிஎஸ் அணியின் மாநகர் மாவட்டச் செயலாளர் முருகானந்தம், சூரம்பட்டி பகுதி செயலாளர் சசிகலா பெருமாள், வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் ராஜமாணிக்கம், மருத்துவர் அணி மாவட்ட செயலாளர் சிவ முருகன், கருங்கல்பாளையம் தங்கராஜ் உள்பட 106 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.
மேலும், முருகானந்தம் தலைமையிலான ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள், சேலத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமியைச் சந்தித்து அதிமுகவில் இணைந்தனர்.ஓ.பன்னீர்செல்வம் அணியின் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் முருகானந்தம் தலைமையிலான நிர்வாகிகள், சேலம் நெடுஞ்சாலை நகரில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர்.