ஓபிஎஸ், அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும்: ஸ்டாலின்

ஓபிஎஸ், அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும்: ஸ்டாலின்
Updated on
2 min read

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''அதிமுக அரசின் இமாலய ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. சேகர் ரெட்டி வீடு, அலுவலகங்களில் இருந்து வருமானவரித் துறையினர் கைப்பற்றிய டைரிகளில் மணல் கொள்ளை விவகாரங்களில் அமைச்சர்கள், அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள் ரூ. 300 கோடி பெற்றது பற்றிய விரிவான தகவல்கள் இருப்பது வெளியாகியுள்ளது. இவற்றை வருமானவரித் துறையே தலைமைச் செயலாளருக்கு அனுப்பி ஊழல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளது.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டியில் இரு அணிகளும் ஊழலில் எந்த அளவுக்கு மூழ்கியுள்ளது என்பதை இது வெளிப்படுத்தியுள்ளது. வருமானவரித் துறை அளித்துள்ள பல்வேறு விவரங்கள் தமிழக அமைச்சர்களின் ஊழல் சாம்ராஜ்யத்தை மக்களுக்கு உணர்த்தியுள்ளன. முதல்வர் கே.பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸும் போட்டிபோட்டிக் கொண்டு அரசு கஜானாவை காலி செய்திருப்பது அடுத்தடுத்து வரும் ஊழல் செய்திகள் மூலம் தெரிய வருகிறது.

ஜெயலலிதா மரணமடைந்த 15 நாள்களில் முதல்வராக இருந்த ஓபிஎஸ் கையெழுத்திட்ட முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவ் தனக்கு வேண்டியவர்களுக்கு அரசு மருத்துவமனைகளை பராமரிக்கும் டெண்டர் விட்டதாக புகார் வந்துள்ளது. இதுகுறித்து இதுவரை எந்த விசாரணையும் நடைபெறவில்லை.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு உணவுத் துறை அமைச்சர் காமராஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரித் துறை சோதையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

சில நாள்களுக்கு முன்பு கியா கார் நிறுவனத்திடம் அதிகமாக லஞ்சம் கேட்டதாக அந்நிறுவனத்தைச் சேர்ந்தவர்களே முகநூலில் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் ரூ. 7 ஆயிரம் கோடியை தமிழகத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்த அந்நிறுவனம் தற்போது ஆந்திரத்துக்கு சென்றுவிட்டது. இது பற்றி முதல்வரோ, தொழில் துறை அமைச்சரோ எதுவும் கூறவில்லை.

அதிமுக அரசில் வெளிவந்த இந்த ஊழல்கள் குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய லஞ்ச ஊழல் தடுப்புத் துறைக்கு இதுவரை டிஜிபி அந்தஸ்தில் இயக்குநர் நியமிக்கப்படவில்லை. அமைச்சர்கள், அதிகாரிகள் மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டிய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியும் காலியாகவே உள்ளது. அந்தப் பொறுப்பு தலைமைச் செயலாளரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. தனியாக ஆணையர் நியமிக்கப்படாததால் ஊழல் கண்காணிப்பு ஆணையம் செயலிழந்து விட்டது.

ஊழல்களை விசாரிக்க 'லோக் ஆயுக்தா' அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் அதனை அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை. ஊழல்களை விசாரிக்கும் அமைப்புகள் முடக்கப்பட்டுள்ளதால் ஊழல் அதிகரித்துள்ளது. அமைச்சர்கள் ஊழல் செய்வதோடு, நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரையம் பலிகடா ஆக்கி வருகிறார்கள்.

எனவே, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும். நேர்மையானவர் என்று பெயரெடுத்த தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தனக்குள்ள அதிகாரத்தை சுதந்திரமாகப் பயன்படுத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in