தேங்காய் விழுந்து வீட்டு மேற்கூரை சேதம்: தென்னை மரத்தை வெட்ட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: பக்கத்து வீட்டில் வளர்க்கப்படும் தென்னை மரத்தின் தேங்காய் விழுந்து மேற்கூரை உடைவதால் அந்த தென்னை மரத்தை வெட்ட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், மயிலாடுதுறை மாவட்டம் குத்தலாத்தை சேர்ந்த வினோத் குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "எனது வீட்டின் சுற்றுச்சுவரை ஒட்டி பக்கத்து வீட்டில் தென்னை மரம் வளர்க்கப்படுகிறது. அதிலிருந்து தேங்காய் விழுவதால் எமது வீட்டின் மேற்கூரை சேதமடைகிறது. அடிக்கடி மேற்கூரை சேதமடைவதால் எனக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது.

இந்த தென்னை மரத்தை அகற்றக் கோரி நான் அளித்த மனுவை ஏற்றுக்கொண்ட வருவாய் அதிகாரி, அந்த மரத்தை அகற்ற கடந்தாண்டு அக்டோபரில் உத்தரவு பிறப்பித்தார். ஆனால், வருவாய் அதிகாரி உத்தரவுப்படி தென்னை மரம் அகற்றப்படவில்லை. எனவே, அந்த மரத்தை அகற்ற டிஎஸ்பிக்கு உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி தென்னை மரம் வைத்திருந்த வீட்டின் உரிமையாளரான கலியமூர்த்திக்கு நோட்டீஸ் அனுப்பிய போதும், அதற்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, "தென்னை மரத்தை வெட்டி அகற்ற தாசில்தாருக்கு உத்தரவிட்டார். தமது சொத்தை பாதுகாக்க மனுதாரருக்கு உரிமை உள்ளது. எனவே, வெட்டப்படும் தென்னை மரத்திற்கு பதிலாக கொய்யா மரத்தை நட்டுவைக்க வேண்டும்” என்று நீதிபதி பிறப்பித்த தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in