

முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது. சட்டப்பேரவைக் கூட்டத்தை கூட்டுவது, பல்வேறு திட்டங்கள் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
தமிழக முதல்வராக கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி கே.பழனிசாமி பொறுப்பேற்றார். அதன்பின் நடக்கும் 4-வது அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும். இன்று மாலை 3 மணிக்கு நடக்கும் இக்கூட்டத்தில், அமைச்சர்கள் தவிர, தலைமைச் செயலர், நிதித்துறை செயலர், முதல்வரின் செயலர்கள் மற்றும் சில முக்கியத் துறைகளின் செயலர்கள் பங்கேற்கின்றனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை பிரதமர் நரேந்திர மோடி திறக்க வேண்டும் என, அவரை நேற்று சந்தித்த முதல்வர் கே.பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
மேலும், ஜிஎஸ்டி வரிக்கான வரைவு மசோதா தாக்கல் செய் யப்பட்டு பேரவையில் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகள், மானிய கோரிக்கை விவாதங்களுக்கான கொள்கை விளக்க குறிப்பு புத்தகங்கள் தயாரித்தல், தொடர் திட்டங்களுக்கு அனுமதியளித்தல் ஆகியவை பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
ரியல் எஸ்டேட் சட்டம், மணல் விற்பனை, எம்எல்ஏக்களின் தொகுதி தொடர்பான கோரிக்கைகள், அமைச்சரவையில் மாற்றங்கள் தொடர்பானவை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. ‘நீட்’ தேர்வை நிரந்தரமாக தமிழகத்துக்கு கொண்டுவராமல் செய்வது, அதே நேரத்தில் கல்வித் தரத்தில் மாற்றங்கள் செய்வது தொடர்பாகவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. சேலம் உருக்காலை, அணைகள் பராமரிப்பு தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.