சிபிசிஐடி விசாரணை நியாயமாக இல்லை: உயர் நீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் புதிய மனு

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி | கோப்புப்படம்
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக் கோரி மாணவியின் தாய் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்த வந்த மாணவி கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதன்படி சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக் கோரி மாணவியின் தாய் செல்வி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், "சிபிசிஐடி விசாரணை நியாயமாக இல்லை. கொலைக் குற்றச்சாட்டின் கீழ் இன்னும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை சிபிசிஐடி போலீசார் மறைத்துள்ளனர். கண்காணிப்புக் கேமரா பதிவுகள் எனக்கு காட்டப்படாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேலும், சம்பவம் நடந்த இடம், ஆதாரங்களின் தடயம் தெரியாத அளவுக்கு முழுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், "சம்பவம் நடந்தபோது மாணவியின் தந்தை சிபிசிஐடி விசாரணை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நிலுவையில் இருப்பதால், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. மேலும், மாணவியின் செல்போன் தடயவியல் ஆய்வு அறிக்கையை பெற்ற பின், இறுதி அறிக்கை தாக்கல் செய்வதற்கு இந்நீதிமன்றம் நான்கு வார கால அவகாசம் வழங்கியுள்ளது" என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மாணவியின் தாய் தாக்கல் செய்த மனுவை, ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குடன் சேர்த்து மார்ச் 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in